கலாசி பாளையம், கே.ஆர்.மார்க்கெட்டுகளை திறக்க வலியுறுத்தி விவசாயிகள், வியாபாரிகள் போராட்டம்


கலாசி பாளையம், கே.ஆர்.மார்க்கெட்டுகளை திறக்க வலியுறுத்தி விவசாயிகள், வியாபாரிகள் போராட்டம்
x
தினத்தந்தி 25 Aug 2020 12:36 AM GMT (Updated: 25 Aug 2020 12:36 AM GMT)

கலாசி பாளையம், கே.ஆர்.மார்க்கெட்டுகளை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

பெங்களூரு, 

பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பெங்களூரு கே.ஆர்.மார்க்கெட் மற்றும் கலாசி பாளையம் மார்க்கெட்டை திறக்க மாநகராட்சி தடை விதித்துள்ளது. அந்த மார்க்கெட்டுகளில் மக்கள் அதிகம் கூடுவதாலும், அவர்களால் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாலும், 2 மார்க்கெட்டுகளையும் திறக்க மாநகராட்சி தடை விதித்திருக்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பூக்கள், பழங்கள், காய்கறிகளை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மார்க்கெட்டுகள் இல்லாத காரணத்தால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர்.

மார்க்கெட்டுகள் மூடப்பட்டுள்ளதால் வியாபாரிகளும், ஆங்காங்கே சாலையோரம் நடைபாதையில் தற்காலிக கடைகளை நடத்தி வியாபாரம் செய்து வருகிறார்கள். நேற்று முன்தினம் மாநகராட்சி மேயரை சந்தித்து கே.ஆர்.மார்க்கெட்டை திறக்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தினார்கள்.

விவசாயிகள் போராட்டம்

இந்த நிலையில், நேற்று காலையில் விவசாயிகள் சங்க தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் தலைமையில் கே.ஆர்.மார்க்கெட் முன்பாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கே.ஆர்.மார்க்கெட், கலாசிபாளையம் மார்க்கெட்டை உடனடியாக திறக்க வேண்டும் என்றும், மாநகராட்சிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள். இந்த போராட்டத்தில் விவசாயிகளுடன், ஏராளமான வியாபாரிகளும் கலந்து கொண்டனர்.

அதன்பிறகு, கே.ஆர்.மார்க்கெட் சர்க்கிளில் இருந்து மாநகராட்சி அலுவலகத்திற்கு விவசாயிகள், வியாபாரிகள் ஊர்வலமாக சென்றார்கள். அங்கு மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து, கொரோனாவால் மூடப்பட்டுள்ள கலாசிபாளையம், கே.ஆர்.மார்க்கெட்டுகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுத்தனர். போராட்டம் மற்றும் ஊர்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

திறக்க அனுமதிக்க வேண்டும்

இதுகுறித்து கோடிஹள்ளி சந்திரசேகர் நிருபர்களிடம் கூறுகையில், “கலாசி பாளையம், கே.ஆர்.மார்க்கெட்டுகள் மூடப்பட்டுள்ளதால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பூக்கள், பழங்கள், காய்கறிகள் பாதி விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் பரிதவித்து வருகிறார்கள். கொரோனா பாதிப்புக்கு மத்தியில் மற்ற கடைகள், வர்த்தக நிறுவனங்களை திறக்க மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.

ஆனால் கொரோனாவை காரணம் காட்டி கலாசி பாளையம், கே.ஆர்.மார்க்கெட்டுகளை மூடி இருப்பது தேவையற்றது. விவசாயிகள், வியாபாரிகளின் நலனில் அக்கறை கொண்டு 2 மார்க்கெட்டுகளையும் உடனடியாக திறக்க மாநகராட்சி அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் தீவிர போராட்டம் நடத்தப்படும்“ என்றார்.

Next Story