கர்நாடக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் ஏற்பாடு சபாநாயகர், விதானசவுதாவில் ஆய்வு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்
கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் ஏற்பாடுகள் குறித்து பெங்களூரு விதானசவுதாவில் நேற்று சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி ஆய்வு நடத்தினார். மந்திரி மற்றும் தலைமை செயலாளர், சட்டசபை செயலாளருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூன் மாதம் நடைபெற இருந்தது.
மழைக்கால கூட்டத்தொடர்
கொரோனா பாதிப்பு காரணமாக ஜூன் மாதம் சட்டசபை கூட்டத்தொடர் நடத்தப்படவில்லை. கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் மழைக்கால கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு, சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி கடிதம் எழுதி இருந்தார். இதையடுத்து, மழைக்கால கூட்டத்தொடரை விதானசவுதாவில் நடத்துவதா? அல்லது வேறு இடத்தில் வைத்து நடத்துவதா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
பின்னர் கடந்த 20-ந் தேதி நடந்த மந்திரிசபை கூட்டத்தில் மழைக்கால கூட்டத்தொடரை அடுத்த மாதம் (செப்டம்பர்) 21-ந் தேதியில் இருந்து 30-ந் தேதி வரை 10 நாட்கள் நடத்துவது என்றும், விதானசவுதாவிலேயே கூட்டத்தொடரை நடத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. அதே நேரத்தில் கொரோனா பாதிப்பு இருப்பதால், கூட்டத்தொடரின் போது முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் மந்திரிசபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
சபாநாயகர் ஆலோசனை
இந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 21-ந் தேதி தொடங்க உள்ளதால், அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விதானசவுதாவில் நேற்று காலையில் சட்டத்துறை மந்திரி மாதுசாமி, தலைமை செயலாளர் விஜய பாஸ்கருடன், சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா பாதிப்பு பெங்களூருவில் அதிகளவில் இருப்பதால் முன் எச்சரிக்கையாக கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் உள்பட அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்ய வேண்டும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி தலைமை செயலாளருக்கு சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
பின்னர் விதானசவுதாவில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் அரங்கை சபாநாயகர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். கொரோனா காரணமாக உறுப்பினர்கள் சமூக இடைவெளியுடன் சபையில் அமர்ந்திருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மந்திரி மாதுசாமி, தலைமை செயலாளரிடம் சபாநாயகர் ஆலோசித்தார். இதற்காக ஒவ்வொரு உறுப்பினருக்கு நடுவேயும் கண்ணாடி தகடுகள் அமைப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தலைமை செயலாளர் விஜய பாஸ்கரிடம் சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story