புதுவையில் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு நாராயணசாமி அறிவிப்பு
கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பேரிடர் மேலாண்மைக்குழு கூட்டம் காணொலி காட்சி மூலமாக நேற்று மாலை நடந்தது. புதுச்சேரி சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி அவரது அலுவலகத்தில் இருந்தபடி கலந்துகொண்டார். அவருடன் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், தலைமை செயலர் அஸ்வனி குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
கூட்டத்தில் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு அதிகாரிகள் தங்களது அலுவலகத்தில் இருந்தபடி கணொலிக்காட்சியில் பங்கேற்று, கொரோனா தடுப்பு குறித்து தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.
அரை மணி நேரத்தில் முடிவு தெரியும்
கூட்டத்தின் முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த 15 நாட்களாக உயர்ந்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் முககவசம் அணியாமல் வெளியே சுற்றுவது, சமூக இடைவெளி கடைபிடிக்காமல் கடைகளுக்கு செல்வது, திருமணம் மற்றும் இறப்பு நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட நபர்களுக்கு மேல் பங்கேற்பது போன்றவை காரணமாகும்.
நமது மாநிலத்தில் நாள்தோறும் 1,200-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பரிசோதனைகள் செய்யப்படுகிறது. அதிகபடியான மருத்துவ பரிசோதனை செய்ய மாநில அரசு சார்பில் ரூ.1.4 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ கருவிகள் மட்டும் ரூ.1.2 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரை மணி நேரத்தில் பரிசோதனை முடிவு தெரிந்துகொள்ள முடியும்.
முழு ஊரடங்கு
இந்த சூழ்நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தையும் பார்க்க வேண்டியதுள்ளது. எந்த பகுதியில் தொற்று அதிகம் பாதிப்பு உள்ளதோ அந்த பகுதியில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதிகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. நாளை (இன்று செவ்வாய்க்கிழமை) தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் இருக்கும். வெளியே சுற்றித்திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வருகிற 31-ந் தேதி வரை தினமும் இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான தகவலை பரப்பி வருகிறார்கள். கடந்த மார்ச் மாதம் நான் அளித்த பேட்டியை சில விஷமிகள் தற்போது சமூக வலைதளத்தில் பரப்பி வருகிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story