கொள்ளையை தடுத்ததால் பயங்கரம்: ஏ.டி.எம். காவலாளி படுகொலை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


கொள்ளையை தடுத்ததால் பயங்கரம்: ஏ.டி.எம். காவலாளி படுகொலை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 26 Aug 2020 4:00 AM IST (Updated: 26 Aug 2020 2:45 AM IST)
t-max-icont-min-icon

விஜயாப்புரா அருகே, ஏ.டி.எம்.மில் கொள்ளையை தடுத்த காவலாளி சுத்தியலால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

விஜயாப்புரா,

விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி டவுன் மாதபாவிதாண்டா பகுதியை சேர்ந்தவர் ராகுல் ரத்தோட்(வயது 22). இவர் சிந்தகி டவுனில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஏ.டி.எம். மையத்திற்கு ராகுல் பணிக்கு வந்து இருந்தார். இரவு சாப்பிட்டு முடித்ததும் ஏ.டி.எம். மையத்தின் முன்பு காவல் பணியில் ஈடுபட்டு இருந்த ராகுல், பின்னர் ஏ.டி.எம். மையத்தின் அருகே உள்ள ஒரு அறையில் தூங்கி கொண்டு இருந்தார். இந்த நிலையில் நள்ளிரவில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் சத்தம் கேட்டது.

இதனால் திடுக்கிட்டு எழுந்த ராகுல் அங்கு சென்று பார்த்தார். அப்போது முகமூடி அணிந்த 3 மர்மநபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொண்டு இருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராகுல், மர்மநபர்களை தடுக்க முயன்றார். அப்போது ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள் 3 பேரும் சேர்ந்து ராகுலை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் தாங்கள் வைத்திருந்த சுத்தியலால் 3 பேரும் சேர்ந்து ராகுலை தலையில் பலமாக அடித்து உள்ளனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் ஏ.டி.எம். மையத்திற்குள் சுருண்டு விழுந்து இறந்தார். இதற்கிடையே ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த அலாரமும் ஒலித்தது. இதனால் மர்மநபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை ஏ.டி.எம். மையத்திற்கு சென்றவர்கள், காவலாளி ராகுல் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து சிந்தகி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சிந்தகி டவுன் போலீசார் வந்து பார்வையிட்டனர். பின்னர் ராகுலின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிந்தகி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் முகமூடி அணிந்து கொண்டு ஏ.டி.எம். மையத்தில் நுழையும் மர்மநபர்கள் 3 பேர், ஏ.டி.எம். எந்திரத்தை சுத்தியலால் உடைப்பதும், இந்த சத்தம் கேட்டு ராகுல் எழுந்து வரும் காட்சிகளும், கொள்ளை முயற்சியை தடுக்க ராகுல், மர்மநபர்களுடன் போராடுவதும், ராகுலை மர்மநபர்கள் சுத்தியலால் அடித்து கொலை செய்யும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.

அந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சம்பவம் நடந்த ஏ.டி.எம். மையத்திக்கு வந்த விஜயாப்புரா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனுபம் அகர்வால் அங்கு விசாரணை மேற்கொண்டார். இந்த கொலை சம்பவம் குறித்து சிந்தகி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு அனுபம் அகர்வாலும் உத்தரவிட்டு உள்ளார்.

கொள்ளையை தடுத்த காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் விஜயாப்புரா மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story