தர்மபுரி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை முடிவை அறிய தனி இணையதளம்
தர்மபுரி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை முடிவுகளை அறிந்து கொள்ள தனி இணையதளத்தை கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்.
தர்மபுரி,
தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை முடிவுகளை அறிந்து கொள்ள தனி இணையதள சேவை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த இணையதளத்தை கலெக்டர் மலர்விழி நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் (பொறுப்பு) இளங்கோவன், கண்காணிப்பாளர் சிவக்குமார், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் சந்திரசேகர், பவர்கிரிட் கழக பொது மேலாளர் வெங்கட்ராமன் உள்பட மருத்துவத்துறை அலுவலர்கள், டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் கலெக்டர் மலர்விழி கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை கால தாமதமின்றி 24 மணி நேரத்திற்குள் கண்டறிந்து உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள பல்வேறு கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை கொரோனா பரிசோதனை முடிவுகள் எஸ்.எம்.எஸ். வாயிலாக அனுப்பப்பட்டு வந்தது. தற்போது இந்த பரிசோதனை குறித்த முடிவுகளை பதிவிறக்கம் செய்யும் வகையில் www.gd-m-ch.in என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
201 பேர் சிகிச்சை
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எந்த பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு உரிய பரிசோதனை முடிவை செல்போன் எண்ணை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதேபோல் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாலும், சளி மாதிரியை உடனடியாக பரிசோதித்து முடிவுகளை தெரிவிப்பதாலும் தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 201 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாநில அளவில் தர்மபுரி மாவட்டத்தில்தான் மிக குறைவான எண்ணிக்கையில் கொரோனா தொற்று பரவியுள்ளது. இந்த மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் ஒரு சதவீதமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து இண்டூர் பவர்கிரிட் கழகம் சார்பில் சமூக பாதுகாப்பு நிதியின் கீழ் ரூ.24.80 லட்சம் மதிப்பில் அல்ட்ரா ஸ்கேன் மற்றும் துணி துவைக்கும் எந்திரம், உலரவைக்கும் எந்திரம் உள்ளிட்ட உபகரணங்களை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கலெக்டர் வழங்கினார்.
Related Tags :
Next Story