சத்தியமங்கலத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு பொதுமக்கள் தர்ணா போராட்டம்


சத்தியமங்கலத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு பொதுமக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 26 Aug 2020 6:39 AM IST (Updated: 26 Aug 2020 6:39 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலத்தில் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் சத்தி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை மதில் சுவரையொட்டி புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்படுவதாக காந்திநகர் பொதுமக்களுக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பவானிசாகர் முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம், நகர செயலாளர் நடராஜ், ஸ்டாலின் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் பெண்கள், பெற்றோர்களுடன் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் என ஏராளமானோர் நேற்று மதியம் 12 மணி அளவில் டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர். பின்னர் கடை முன்பு உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் தாசில்தார் கணேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, கோபி மதுவிலக்கு பிரிவு தாசில்தார் காந்தி, மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம், புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, சத்தியமங்கலம் கிராம நிர்வாக அதிகாரி கவுசியன் மற்றும் ஈரோடு ஆயுதப்படை போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு

அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘கடந்த 8 மாதங்களுக்கு முன்பே இங்கு டாஸ்மாக் கடை அமைக்க முயற்சி நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாசில்தார், கோபி ஆர்.டி.ஓ.விடம் மனு கொடுத்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்காததால் சாலைமறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். அதற்கு, டாஸ்மாக் கடை இங்கு திறக்கமாட்டோம் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்த நிலையில் இன்று (அதாவது நேற்று) மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே இங்கு டாஸ்மாக் கடை திறக் கக்கூடாது.’ என்றனர்.

அதற்கு அதிகாரிகள், ‘15 நாட்கள் டாஸ்மாக் கடை திறக்கமாட்டோம். மேலும் மது பாட்டில்களையும் உள்ளே வைக்கமாட்டோம். இந்த 15 நாட்களுக்குள் பொதுமக்கள் கோர்ட்டுக்கு சென்று தடையாணை பெறவோ, உயர்மட்ட அதிகாரிகள் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தியோ டாஸ்மாக் கடை திறக்காமல் இருக்க ஏற்பாடு செய்யலாம். இதில் எதுவும் நீங்கள் செய்யவில்லை என்றால் அரசு உத்தரவு நிறைவேற்றப்படும்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் டாஸ்மாக் கடைக்கு வேனில் வந்த மதுபாட்டில் கள் திருப்பி அனுப்பப்பட்டது.

Next Story