டாஸ்மாக் ஊழியர் வீட்டில் கொள்ளை: போலீஸ்காரராக நடித்த தொழிலாளி கைது


டாஸ்மாக் ஊழியர் வீட்டில் கொள்ளை: போலீஸ்காரராக நடித்த தொழிலாளி கைது
x
தினத்தந்தி 26 Aug 2020 10:04 AM IST (Updated: 26 Aug 2020 10:04 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் ஊழியர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் போலீஸ்காரராக நடித்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் அருகேயுள்ள பொன்னகரம் அண்ணாநகரை சேர்ந்தவர் காளஸ்வரன். கடந்த ஆண்டு இவருடைய வீட்டுக்கு காரில் ஒரு கும்பல் வந்தது. மேலும் தங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறியதோடு, காளஸ்வரன் வீட்டை சோதனையிட போலீஸ் பாதுகாப்புடன் வந்துள்ளதாக கூறினர். அதற்கேற்ப அந்த கும்பலில் சிலர் டிப்டாப் உடை அணிந்தும், சிலர் போலீஸ் சீருடை அணிந்தும் இருந்தனர்.

அப்போது பீரோ சாவி இல்லாததால், அங்கன்வாடி மையத்துக்கு வேலைக்கு சென்ற காளஸ்வரனின் மனைவியை அழைத்து வந்து பீரோவை திறந்து பார்த்தனர். இதையடுத்து பீரோவில் இருந்த நகைகள், பணம் மற்றும் சொத்து ஆவணங்களை எடுத்து சென்றனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தனிப்படை அமைத்து விசாரிக்கும்படி உத்தரவிட்டார்.

போலீஸ்காரராக நடித்தவர் கைது

அதன்பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி காளஸ்வரனின் உறவினரும், பனியன்கடை உரிமையாளருமான திருப்பூர் மாவட்டம் சாமுண்டிபுரத்தை சேர்ந்த கோபி, அவருடைய மனைவி, மகன் உள்பட 6 பேரை கைது செய்தனர். மேலும் ரூ.5 கோடி மதிப்பிலான ஆவணங்கள், ரூ.5 லட்சம், 100 பவுன் நகைகள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து சிறையில் இருக்கும் கோபி, குகன்செட்டி ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர்.

அதில் திருப்பூர் முதலிபாளையத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 32) என்பவருக்கும் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர். விசாரணையில், அவர் பனியன் கம்பெனி தொழிலாளி ஆவார். பண ஆசைகாட்டி போலீஸ்காரர் போன்று சீருடை அணிய வைத்து நடிக்க வைத்தது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து ஒரு கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story