மாணவ-மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு அக்டோபர் 1-ந் தேதி முதல் கர்நாடகத்தில் கல்லூரிகள் திறக்கப்படும் - துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் அறிவிப்பு


மாணவ-மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு அக்டோபர் 1-ந் தேதி முதல் கர்நாடகத்தில் கல்லூரிகள் திறக்கப்படும் - துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் அறிவிப்பு
x
தினத்தந்தி 27 Aug 2020 5:00 AM IST (Updated: 27 Aug 2020 4:30 AM IST)
t-max-icont-min-icon

மாணவ-மாணவிகளுக்கு உரிய பாதுகாப்புடன் கர்நாடகத்தில் அக்டோபர் 1-ந் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் நேற்று அறிவித்தார்.

பெங்களூரு,

பெங்களூரு சுப்பண்ணா கார்டன் வார்டில் நேற்று பல்வேறு வளர்ச்சி பணிகளை துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தொடங்கி வைத்தார். பின்னர் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. கொரோனா பரவல் இருப்பதால் மத்திய அரசிடம் இருந்து நேரடியாக கல்லூரிகளை திறந்து வகுப்புகளை தொடங்கும்படி வழிகாட்டுதல்கள் எதுவும் வரவில்லை. அடுத்த மாதம் (செப்டம்பர்) சில கல்லூரி படிப்புகளுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளது. அதே நேரத்தில் அரசும், உயர்கல்வி படிப்புக்கான வகுப்புகளை ஆன்லைன் மூலமாக நடத்துவதற்கும், பிற நடவடிக்கைகளை ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 1-ந் தேதியில் இருந்து கல்லூரி படிப்புகளுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலமாக தொடங்கப்பட உள்ளது.

அதுபோல, அக்டோபர் 1-ந் தேதியில் இருந்து மாநிலத்தில் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்படும். மாணவ, மாணவிகளும் கல்லூரிகளுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும். உயர் கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி, கல்லூரிகளில் வகுப்புகளை தொடங்க மாநில அரசும் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மத்திய அரசு கல்லூரி படிப்புகளுக்கான வகுப்புகளை தொடங்குவதற்கு அக்டோபரில் அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கையில், இந்த நடவடிக்கைகளை உயர் கல்வித்துறை எடுத்து வருகிறது.

கொரோனா பாதிப்பு இருப்பதால் கல்லூரி வகுப்புகள் தொடங்கினாலும், மாணவ-மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியே கல்லூரி வகுப்புகள் தொடங்கப்படும். நீட் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்கள் கூறி வருவது பற்றி எனது கவனத்திற்கும் வந்துள்ளது. கர்நாடகத்தில் என்ஜினீயரிங் உள்ளிட்ட படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு (சி.இ.டி) வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்வை 1 லட்சத்து 94 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதி இருந்தார்கள்.

அவர்களில் 63 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அவர்களுக்காக தனியாக தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. கொரோனா பாதிப்புடன் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளும் பொது நுழைவு தேர்வில் சிறப்பான தேர்ச்சி பெற்றிருந்தனர். கர்நாடகத்தில் இதுபோன்ற நிலை இருக்கும் பட்சத்தில் நீட் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவிப்பது எதற்காக என்று தெரியவில்லை. நீட் தேர்வு வேண்டாம் என்று கூறுபவர்களுக்கு ஒன்றை சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அதாவது மாணவ, மாணவிகளின் எதிர்கால வாழ்க்கையில் யாரும் விளையாடக்கூடாது.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறுவதன் பின்னணி என்ன? என்பது தெரியவில்லை. மெரிட் மூலமாக மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு சீட் கிடைக்க கூடாது. நீட் தேர்வு நடத்த கூடாது என்பதில் ஆரம்பத்தில் இருந்தே சிலர் செயல்பட்டு வருகிறார்கள். நீட் தேர்வை நடத்த கூடாது என்பதற்கு பின்னால் பெரிய கும்பலே இருப்பது போல தோன்றுகிறது. ஆனால் நீட் தேர்வை நடத்த விடக்கூடாது என்று நினைப்பவர்களின் எண்ணம் ஒரு நாளும் நிறைவேறாது.

எனவே நீட் தேர்வு நடத்தப்பட்டே தீர வேண்டும். எக்காரணத்தை கொண்டும் நீட் தேர்வு நடத்தப்படாமல் இருக்க கூடாது. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது துரதிர்ஷ்டவசமானது. நீட் தேர்வை நடத்தவும், அதற்கு தேவையான நடவடிக்கைகள் மற்றும் உதவிகளை செய்து கொடுக்கவும் கர்நாடக அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story