அருந்ததியர் சமூகத்திற்கு 3 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று கோர்ட்டு தீர்ப்பு - அரசியல் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


அருந்ததியர் சமூகத்திற்கு 3 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று கோர்ட்டு தீர்ப்பு - அரசியல் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 28 Aug 2020 4:00 AM IST (Updated: 28 Aug 2020 1:35 AM IST)
t-max-icont-min-icon

அருந்ததியர் சமூகத்திற்கு 3 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து ஈரோட்டில் அரசியல் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

ஈரோடு,

தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில் 3 சதவீத உள் இட ஒதுக்கீடு அருந்ததியர் சமூகத்திற்கு வழங்க மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது என்று சுப்ரீம் கோட்டு நேற்று தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்று ஈரோட்டில் பல்வேறு அரசியில் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

ஈரோடு மாவட்ட தி.மு.க. சார்பில், மணல்மேட்டில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் அந்தியூர் பா.செல்வராஜ் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

இதேபோல் அருந்ததியர் சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 3 சதவீத தனி உள் இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை வரவேற்று, பாரதீய ஜனதாக கட்சி ஈரோடு மாவட்ட எஸ்.சி. பிரிவு சார்பில், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் எஸ்.சி. பிரிவு மாநில துணைத்தலைவர் விநாயகமூர்த்தி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

மேலும் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்று, அருந்ததியர் இளைஞர் பேரவை சார்பில் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள பெரியார் மற்றும் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பேரவை தலைவர் என்.ஆர்.வடிவேல் ராமன் கலந்து கொண்டு பெரியார் மற்றும் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். ஜெகஜீவன்ராம் ஜனநாயக மக்கள் இயக்க பொதுச்செயலாளர் ஆறுமுகம், மாநில துணைத்தலைவர் சண்முகம், தலித் விடுதலை இயக்க மாவட்ட தலைவர் பொன்சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

தமிழ் புலிகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story