கோவில்பட்டியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடைபெற்ற திருமண விழா


கோவில்பட்டியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடைபெற்ற திருமண விழா
x
தினத்தந்தி 29 Aug 2020 4:45 AM IST (Updated: 29 Aug 2020 12:07 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கு காரணமாக திருமண விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்களும் எளிமையாக நடத்தப்படுகிறது.

கோவில்பட்டி,

பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும்படியும், அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்கிறவர்கள் முககவசம், கையுறை கட்டாயம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 5 மாதங்களாக மண்டபங்களில் திருமணம் நடத்தப்படவில்லை. தற்போது மண்டபங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து, 50-க்கும் குறைவான உறவினர்கள் பங்கேற்புடன் திருமண விழாவை எளிமையாக நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் மண்டபத்தில் என்ஜினீயர்களான கவுதம்குமார்-மனோகரி ஆகியோரது திருமண விழா நேற்று நடந்தது. தங்களது திருமணத்தை கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடத்த திட்டமிட்ட மணமக்கள், திருமண அழைப்பிதழில், அரசு விதிமுறைகளின்படி திருமணம் எளிமையாக நடத்தப்படுகிறது என்று குறிப்பிட்டு இருந்தனர். மேலும் திருமண விழாவுக்கு மொத்தம் 40 பேரை மட்டுமே அழைத்து இருந்தனர்.

திருமண மண்டப நுழைவுவாயிலில் அனைவருக்கும் கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வழங்கப்பட்டது. ‘தெர்மல் ஸ்கேனர்‘ மூலம் உடல்வெப்பநிலை பரிசோதித்த பின்னரே மண்டபத்துக்குள் அனுமதித்தனர்.

சமூக இடைவெளியுடன் உறவினர்களை மண்டபத்தில் அமர வைத்தனர். விழாவுக்கு வந்தவர்களுக்கு கபசுர குடிநீர் பொடி டப்பாவும், முககவசமும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Next Story