கொரோனா அறிகுறி தென்பட்டவுடன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும் - பொதுமக்களுக்கு தென்காசி கலெக்டர் அறிவுறுத்தல்


கொரோனா அறிகுறி தென்பட்டவுடன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும் - பொதுமக்களுக்கு தென்காசி கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 29 Aug 2020 4:15 AM IST (Updated: 29 Aug 2020 12:51 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா அறிகுறி தென்பட்டவுடன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும் என்று பொதுமக்களுக்கு தென்காசி கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது.

தென்காசி,

கொரோனா அறிகுறிகள் தென்பட்டால், அருகிலுள்ள மருந்து கடைகள், போலி மருத்துவர்களிடம் மருந்து உட்கொண்டால் போதுமானது என்றும், மது அருந்துவதால் விரைவில் குணம் பெறலாம் என்றும் வதந்திகள் பரவி வருகின்றன. பொதுமக்கள் யாரும் அத்தகைய வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், தமிழக அரசு சுகாதாரத்துறை வழங்கி வரும் வழிகாட்டு முறைகளை மட்டும் பின்பற்றும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

கொரோனா நோய்த்தொற்று உள்ளவர்கள் மது அருந்துவது உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகும். சமூக இடைவெளி பின்பற்றுதல், கண், வாய், மூக்கு பகுதிகளை கைகளால் தொடாமல் இருத்தல், அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவுதல், முககவசம் சரியான முறையில் அணிதல் அவசியம். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் கூடும் விழாக்கள், துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து, கொரோனா தொற்று ஏற்படாமல் காத்து கொள்ள வேண்டும். கொரோனா தொற்று நோய் அறிகுறிகள் தென்பட்டால் தயக்கமின்றி அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆஸ்பத்திரிகளில் பரிசோதனை செய்து கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

கொரோனா நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த ரெம்டெஸ்விர், டாசிலிசுமப் போன்ற விலை உயர்ந்த ஊசிகள், மருந்துகள் தென்காசி, சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமே உள்ளது. அங்கு இதுவரை 61 நோயாளிகளுக்கு விலை உயர்ந்த மருந்துகள் செலுத்தப்பட்டு குணமடைந்துள்ளனர். எனவே கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடனேயே அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று விரைவில் குணமடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story