நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு: நடிகை ரியாவிடம் 10½ மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை


நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு: நடிகை ரியாவிடம் 10½ மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை
x
தினத்தந்தி 29 Aug 2020 12:28 AM GMT (Updated: 29 Aug 2020 12:28 AM GMT)

நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 10½ மணி நேரம் விசாரணை நடத்தினர்.

மும்பை,

34 வயதான பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வந்த நிலையில், பீகாரில் வசித்து வரும் சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின் பேரில் பாட்னா போலீசார் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், பணமோசடி வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து வழக்கை விசாரிக்கும் உரிமை யாருக்கு என்பதில் மராட்டியம், பீகார் மாநிலங்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், பீகார் மாநில அரசின் பரிந்துரையை ஏற்று வழக்கை மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து டெல்லியில் இருந்து மும்பை வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் சாந்தாகுருசில் உள்ள டி.ஆர்.டி.ஓ. விருந்தினர் மாளிகையில் முகாமிட்டு கடந்த 8 நாட்களாக விசாரித்து வருகின்றனர். சுஷாந்த் சிங்குடன் தங்கியிருந்த அவரது நண்பர் சித்தார்த் பிதானி, சமையல்காரர் நீரஜ் சிங், வீட்டு வேலைக்காரர் தீபக் சாவந்த் உள்ளிட்டவர்களிடம் பலகட்ட விசாரணையை மேற்கொண்டனர். நேற்று முன்தினம் நடிகை ரியாவின் சகோதரர் சோவிக்கிடம் 8 மணி நேரம் விசாரணை நடந்தது.

இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அனுப்பப்பட்ட சம்மனை ஏற்று நேற்று காலை 10.30 மணிக்கு டி.ஆர்.டி.ஓ. விருந்தினர் மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு நடிகை ரியா ஆஜரானார்.

அவரிடம் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர். 20 கேள்விகள் அடங்கிய பட்டியலை தயாரித்து, அந்த கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தியதாக கூறப்பட்டது. இதில் சுஷாந்த் சிங்குடன் நெருக்கம் ஏற்பட்டது எப்படி? பல சந்தர்ப்பங்களில் சுஷாந்த் சிங் தந்தையின் போன் அழைப்பை ஏற்று பேசாதது ஏன்? வெளிநாட்டு பயணத்தின் போது நடந்தது என்ன? போதைப்பொருள் விவகாரம் உள்ளிட்ட கேள்விகளை அவர்கள் கேட்டதாக தெரிகிறது.

விசாரணையை தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடிகை ரியா வெளியே வந்தார். இதன் மூலம் அவரிடம் சுமார் 10½ மணி நேரம் தீவிர விசாரணை நடந்தது தெரியவந்தது.

ஆனால் ரியா திருப்திகரமான பதிலை அளிக்கவில்லை என்றும், இதனால் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது

இதற்கிடையே டி.ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விசாரணையை முடித்து விட்டு நேராக சாந்தாகுருஸ் போலீஸ் நிலையத்துக்கு ரியா சென்றார். தனக்கும், தனது குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்க கோரி அவர் மனு கொடுத்தார். இதையடுத்து ரியாவை போலீசார் வீட்டுக்கு கொண்டு சென்று விட்டனர்.

Next Story