ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் சீமான் வலியுறுத்தல்


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் சீமான் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 Aug 2020 7:07 AM IST (Updated: 29 Aug 2020 7:07 AM IST)
t-max-icont-min-icon

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.

பூந்தமல்லி,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி காஞ்சீபுரம் தாசில்தார் அலுவலகம் முன் தீக்குளித்து இறந்த செங்கொடியின் 9-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லம் முன்பு செங்கொடியின் உருவப்படத்துக்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

பின்னர் 7 தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி கையில் பதாகைகள் ஏந்தி சீமான் தலைமையில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்பிறகு நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:-
கவர்னர் கையெழுத்தில் 7 பேர் விடுதலை உறங்கி கிடக்கிறது. கேரளாவில் 7 ஆண்டுகள், தமிழகத்தில் 10 ஆண்டுகளில் கைது செய்யப்பட்டவர்களை எல்லாம் விடுதலை செய்யலாம். காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் தமிழர்கள் என்றால் நஞ்சாக தெரியும்.

7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும். அல்லது வேறு சட்டம் இயற்றி அவர்களை விடுவிக்க வேண்டும். ஆட்சியில் இருக்கும்போது அமைதியாக இருப்பது, ஆட்சியில் இருந்து இறங்கும்போது 7 பேர் விடுதலை செய்வது குறித்து பேசுவது என்பது ஏமாற்று வேலை.

இ-பாஸ் விற்பனை பண்டமாக மாறிவிட்டது. இ-பாசிலாவது அரசு பாசாகட்டும். ஏற்கனவே 20 லட்சம் பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். நீட் தேர்வால் போலி டாக்டர்கள் வந்து விட்டனர். எளிதாக கிடைக்க வேண்டிய கல்வியை இந்த நாட்டில் கடினப்பட்டு அடைய வேண்டி நிலை உள்ளது. படிப்பதற்காக மாணவர்கள் உயிரை கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.

தேர்தல் லாபத்துக்காகவாவது 7 பேரை விடுதலை செய்யுங்கள். எந்த கட்சியோடும் நாங்கள் கூட்டணி கிடையாது. நாங்கள் மக்களுடன் கூட்டணி வைத்துள்ளோம். வலுவான கூட்டணியை நாங்கள்தான் வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story