திருச்சி வயலூர் ரோட்டில் சுற்றித்திரிந்த முதலையால் பரபரப்பு வனத்துறையினர் பிடித்து சென்றனர்


திருச்சி வயலூர் ரோட்டில் சுற்றித்திரிந்த முதலையால் பரபரப்பு வனத்துறையினர் பிடித்து சென்றனர்
x
தினத்தந்தி 29 Aug 2020 11:18 PM GMT (Updated: 29 Aug 2020 11:18 PM GMT)

திருச்சி வயலூர் ரோட்டில் சுற்றித்திரிந்த முதலையால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் அதை பிடித்து சென்றனர்.

திருச்சி,

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது காவிரி ஆற்றிலிருந்து பல கிளை வாய்க்கால்களுக்கும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலிலும் காவிரி ஆற்றின் தண்ணீர் தற்போது செல்கிறது. இந்த வாய்க்காலில் அவ்வப்போது முதலைகள் வந்து பொதுமக்களை அச்சுறுத்துவது உண்டு.

சாலையில் திரிந்த முதலை

இந்த வாய்க்காலில் அவ்வப்போது முதலைகள் வந்து பொதுமக்களை அச்சுறுத்துவது உண்டு. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திருச்சி-வயலூர் சாலையில் உள்ள ரெங்கா நகர் ரெட்டை வாய்க்கால் பகுதியில் இருந்து வெளியேறிய முதலை ஒன்று ரோட்டில் சுற்றி திரிந்தது.

அதிகாலை வேளையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு நபர் ரோட்டில் முதலை சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் தகவலறிந்து அப்பகுதியை சேர்ந்த சிலரும் அங்கு கூடினர். பின்னர் உடனடியாக திருச்சி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பிடிபட்டது

வனத்துறையினர் விரைந்து வந்து ரோட்டில் சுற்றித்திரிந்த முதலையை லாவகமாக பிடித்தனர். அந்த முதலை சுமார் 3 மீட்டர் நீளத்துக்கு இருந்தது. பின்னர் வனத்துறையினர் முதலையின் வாயை நன்றாக கட்டி வாகனத்தில் எடுத்துச் சென்று கல்லணை பகுதியில் விட்டனர்.

திருச்சியில் சாலையில் சுற்றித்திரிந்த முதலையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story