ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவம் தொடங்கியது இன்று பூச்சாண்டி சேவை


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவம் தொடங்கியது இன்று பூச்சாண்டி சேவை
x
தினத்தந்தி 29 Aug 2020 11:22 PM GMT (Updated: 29 Aug 2020 11:22 PM GMT)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவம் நேற்று தொடங்கியது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) பூச்சாண்டி சேவை நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கம்,

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி-புரட்டாசி மாதத்தில் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழை திருநாள் 9 நாட்கள் மிக சிறப்பாக நடைபெறும். யாகசாலையில் நம்பெருமாள் எழுந்தருளியிருக்க அவரைச்சுற்றிலும் பூக்கள் பரப்பி வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும். இதனால் இந்நிகழ்ச்சி பூ பரத்திய ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.

அத்துடன் கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் மூலவர், உற்சவர் உள்பட சிறிய, பெரிய மூர்த்திகள் அனைவருக்கும் நூலிழைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும் எனவே இதற்கு நூலிழை திருவிழா என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இவ்விழாவே ஸ்ரீரங்கத்தில் திருப்பவித்ரோத்சவம் என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. பவித்ரோத்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்திற்கு அருகில் உள்ள பவித்ரோத்சவ மண்டபத்தில் எழுந்தருளுவார்.

பூச்சாண்டி சேவை

இந்தாண்டு ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவில் வளாகத்தினுள் திருவிழா நடைபெறுகிறது. பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. பவித்த உற்சவத்தின் முதல் நாளான நேற்று காலை 8.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு காலை 8.45 மணிக்கு யாகசாலைக்கு வந்து சேர்ந்தார்.

அங்கு காலை 10.30 மணிக்கு சிறப்பு திருவாராதனம் கண்டருளுளினார். பின்னர் மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுளினார். பின்னர் நம்பெருமாள் அலங்காரம் வகையறா கண்டருளி இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சாண்டிசேவை எனப்படும் அங்கோபாங்க சேவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

நெல் அளவை கண்டருளல்

பூச்சாண்டிசேவையின் போது மூலவர் ரெங்கநாதரின் திருமுக மண்டலம் உள்பட திருமேணி முழுவதும் நூலிழைகளை சுருள், சுருளாக வைத்து அலங்கரித்திருப்பர். இந்த காட்சி பார்வைக்கு அச்சமூட்டுவதுபோல் இருக்கும் எனவே இதை பூச்சாண்டி சேவை என்று குறிப்பிடும் பழக்கம் ஏற்பட்டது. திருவிழாவின் 7-ம் நாளான வரும் 4-ந் தேதி உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் கோவில் கொட்டாரத்தில் நெல் அளவை கண்டருளுகிறார்.

உற்சவத்தின் 9-ம் நாளான 6-ந் தேதி காலை நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். இத்துடன் பவித்ர உற்சவம் நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணைஆணையர் ஜெயராமன், உதவிஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Next Story