மகளை பார்க்க சென்றபோது ஆட்டோ-லாரி மோதியதில் மூதாட்டி பரிதாப சாவு


மகளை பார்க்க சென்றபோது ஆட்டோ-லாரி மோதியதில் மூதாட்டி பரிதாப சாவு
x
தினத்தந்தி 30 Aug 2020 5:26 AM IST (Updated: 30 Aug 2020 5:26 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே ஆட்டோ-லாரி மோதிய விபத்தில் மகளை பார்க்க சென்ற மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

ஆத்தூர்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உடையநாச்சி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி பாப்பா (வயது 60). இவர்களது இளைய மகள் கவுரி. இவர் ஆத்தூர் வ.உ.சி. நகர் கல்லாங்குத்து பகுதியில் வசித்து வருகிறார். இவரைப் பார்க்க பாப்பா தனது மூத்த மகள் செல்வியுடன் ஒரு ஆட்டோவில் நேற்று காலை கள்ளக்குறிச்சியில் இருந்து ஆத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். மேலும் அவர் மகளுக்காக 20 கிலோ ரேஷன் அரிசி, மளிகை பொருட்களை பையில் வைத்திருந்தார்.

ஆட்டோவை கள்ளக்குறிச்சி மாவட்டம் கொங்கார்பாளையம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (30) என்பவர் ஓட்டி வந்தார். ஆத்தூர் புறவழிச்சாலை அப்பம்மசமுத்திரம் என்ற இடத்தில் வந்தபோது கண்இமைக்கும் நேரத்தில் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற டாரஸ் லாரியும், ஆட்டோவும் நேருக்குநேர் மோதி விபத்தில் சிக்கியது.

விசாரணை

இதில் ஆட்டோவில் இருந்த பாப்பா உடல் நசுங்கி சம்பவ இடத்தியே பரிதாபமாக இறந்தார். செல்வி படுகாயமடைந்து ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆட்டோ டிரைவர் சுரேஷ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். மேலும் ஆட்டோவில் இருந்த ரேஷன் அரிசி சாலை முழுவதும் சிதறி கிடந்தது.

இந்த விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மகள் கண் எதிரிலேயே தாய் பலியான சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story