‘மாணவர்களின் மனித கடவுளே’ முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து போஸ்டர்


‘மாணவர்களின் மனித கடவுளே’ முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து போஸ்டர்
x
தினத்தந்தி 30 Aug 2020 6:28 AM IST (Updated: 30 Aug 2020 6:28 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்களின் மனித கடவுளே என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து கோவையில் அரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.

கோவை,

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அத்துடன் இந்த ஆண்டு பள்ளி பொதுத்தேர்வு மற்றும் கல்லூரி செமஸ்டர் தேர்வு எழுத இருந்த அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.

கல்லூரிகளில் அரியர் (தோல்வி அடைந்த) பாடங்களை எழுதுவதற்கு தேர்வு கட்டணம் செலுத்திய அனைத்து மாணவ- மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 26-ந் தேதி அறிவித்தார்.

முதல்-அமைச்சருக்கு நன்றி

இது, கல்லூரிகளில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற முடியாமல் இருந்த முன்னாள் மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளித்து உள்ளது. இதை கொண்டாடும் வகையிலும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் கோவை அரசு ஆஸ்பத்திரி சுற்றுச்சுவர் உள்பட பல பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.அதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படம் வைத்து ‘மாணவர்களின் மனித கடவுளே என்றும், எங்கள் ஓட்டு உங்களுக்கே’ என்றும் அவரை புகழ்ந்து வாசகங்கள் இடம் பெற்று உள்ளன.

முதல்- அமைச்சர் அறிவிப்பால் அரியர் பாடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்காக தமிழ்நாடு மாணவர்கள் முன்னேற்ற அமைப்பு சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரை அந்த வழியாக சென்ற பலரும் சிறிதுநேரம் நின்று பார்த்து சென்றனர்.

இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story