நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் முழு ஊரடங்கு: மக்கள் வீடுகளில் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடின - வெளியே சுற்றியவர்களுக்கு போலீசார் அபராதம்


நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் முழு ஊரடங்கு: மக்கள் வீடுகளில் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடின - வெளியே சுற்றியவர்களுக்கு போலீசார் அபராதம்
x
தினத்தந்தி 31 Aug 2020 4:30 AM IST (Updated: 31 Aug 2020 1:42 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடின. அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

நெல்லை,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதேபோல் ஆகஸ்டு மாதமும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கையொட்டி நெல்லையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. காய்கறி, மளிகை கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் மக்கள் தங்களது வீடுகளில் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடின. ஆனால் ஊரடங்கில் தளர்வு என்பது போல் ஒரு சில இடங்களில் மட்டும் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இதனால் கடைவீதிகளில் ஒரு சில இடங்களில் மக்கள் நடமாட்டம் காணப்பட்டது.

இதை அறிந்ததும் நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று, கடைகளை திறந்து வைத்திருந்த உரிமையாளர்களுக்கு ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர். பால், மருந்தகம் உள்ளிட்ட கடைகள் மட்டும் வழக்கம் போல் திறந்திருந்தன.

இதேபோல் ஊரடங்கு முடிவுக்கு வந்ததாக கருதிய பொதுமக்கள் சிலர் தங்களது மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் அங்குமிங்கும் சுற்றித்திரிந்தார்கள். குடும்பம், குடும்பமாக இருசக்கர வாகனங்களில் தங்களது உறவினர்களின் வீடுகளுக்கு சென்றனர்.

நெல்லை மாநகரில் போலீசார் ஆங்காங்கே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கார், இருசக்கர வாகனங்களில் அத்தியாவசிய தேவையின்றி சென்றவர்களை பிடித்து அபராதம் விதித்தனர். கார், வேன்கள் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. சரக்கு வாகனங்கள் மட்டும் சரக்குகளை ஏற்றி சென்றன. இதேபோல் நெல்லை மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்திலும் முழு ஊரடங்கு நடந்தது. இதையொட்டி பால், மருந்தகம் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் முழு ஊரடங்கை மீறி அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். ஆங்காங்கே போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டிருந்தனர். இதேபோல் கோவில்பட்டி, திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்ளிட்ட பல இடங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

தென்காசி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மாவட்டத்தின் தலைநகரான தென்காசியிலும் மருந்து கடைகள், பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் தென்காசி சுவாமி சன்னதி பஜார், அம்மன் சன்னதி பஜார், கூலக்கடை பஜார், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், கன்னிமாரம்மன் கோவில் தெரு, கீழ ஆவணி மூல வீதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. பெரும்பாலானவர்கள் தங்களது வீடுகளிலேயே இருந்தனர். அத்தியாவசிய தேவைகளுக்காக சிலர் மட்டுமே வாகனங்களில் சென்றனர்.

முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மாறாக வெளியில் சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

Next Story