முழு ஊரடங்கையொட்டி மாவட்டத்தில் கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின


முழு ஊரடங்கையொட்டி மாவட்டத்தில் கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 30 Aug 2020 11:06 PM GMT (Updated: 30 Aug 2020 11:06 PM GMT)

முழு ஊரடங்கையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வாகன போக்குவரத்து இல்லாததால் சாலைகள் வெறிச்சோடின. தடையை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை,

தளர்வில்லாத முழு ஊரடங்கையொட்டி நேற்று புதுக்கோட்டையில் மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. கடைவீதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் திறக்கப்படவில்லை. நேற்று முகூர்த்த நாள் என்பதாலும், இ-பாஸ் தளர்வு அளிக்கப்பட்டதாலும் வாகனங்களில் பொதுமக்கள் பலர் சென்று வந்ததை காண முடிந்தது. மதியத்திற்கு மேல் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் ஒரு சில இடங்களில் தடையை மீறி மீன் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. மேலும் பழைய பஸ் நிலையம் அருகே பூ மார்க்கெட் திறக்கப்பட்டிருந்தது. நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாட்ஷா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு கடைகளை திறந்திருந்த உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். அந்தவகையில் ரூ.4 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது.

அன்னவாசல்

அன்னவாசலுக்கு உட்பட்ட மலைக்குடிப்பட்டி, இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, பரம்பூர், குடுமியான்மலை, வயலோகம் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் அன்னவாசல் பகுதிகளில் உள்ள சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல அறந்தாங்கி, அரிமளம், திருமயம், திருவரங்குளம், கந்தர்வகோட்டை, ஆலங்குடி, கறம்பக்குடி, கீரமங்கலம், ஆவுடையார்கோவில், கோட்டைப்பட்டினம், மணமேல்குடி, காரையூர், கீரனூர், விராலிமலை, ஆவூர், ஆதனக்கோட்டை, வடகாடு ஆகிய பகுதிகளிலும் மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள் தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

Next Story