முழு ஊரடங்கு: விதிமுறைகளை மீறி சாலையில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகள்


முழு ஊரடங்கு: விதிமுறைகளை மீறி சாலையில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகள்
x
தினத்தந்தி 31 Aug 2020 4:43 AM IST (Updated: 31 Aug 2020 4:43 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கான நேற்று விதிமுறைகளை மீறி சாலையில் வாகன ஓட்டிகள் சுற்றித்திரிந்தனர். கடைகளில் மறைமுக விற்பனை நடைபெற்றது.

கரூர்,

தமிழக அரசு அறிவித்தபடி இந்த மாத ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி 5-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று கரூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி கரூர் ஜவஹர் பஜார், கோவை ரோடு, காந்தி கிராமம், தாந்தோணிமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டிருந்தன. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. நகரப்பகுதிகளை சுற்றி உள்ள அனைத்து பஸ்பாடி கட்டும் நிறுவனங்கள் மற்றும் கொசுவலை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்றுமதி நிறுவனங்களும் அடைக்கப்பட்டு இருந்தன. வெங்கமேடு, தாந்தோணிமலை, பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே செயல்படும் இறைச்சி கடைகள், மீன் கடைகள் உள்ளிட்ட கடைகளும் திறக்கப்படாததால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தெரு பகுதிகளில் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்து கொண்டும், அங்காங்கே மர நிழலில் நின்று அரட்டை அடித்து கொண்டும் இருந்தனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் பஸ் நிலையம், செங்குந்தபுரம், வையாபுரிநகர், ஜவஹர்பஜார், வெங்கமேடு, கோவைரோடு உள்ளிட்ட பகுதிகள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. சில பகுதிகளில் போலீசார் சாலையில் இரும்பு தடுப்புகள் அமைத்து, அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி விசாரித்து திருப்பி அனுப்பினர். நகரப்பகுதிகளில் உள்ள அனைத்து ஓட்டல்கள், பேக்கரிகள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. மருந்து கடைகள், பாலகம், மருத்துவமனைகள் செயல்பட்டன. இருப்பினும் மாவட்ட பகுதிகளில் பல இடங்களில் விதிமுறைகள் மீறப்பட்டன.

வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்கு

குளித்தலை பகுதியில் நேற்று பல கடைகளில் மறைமுக விற்பனை நடைபெற்றது. சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம், லாரி, கார், மோட்டார் சைக்கிளில் செல்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. அதிலும் முக்கியமாக திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் இருந்து குளித்தலைக்கும், குளித்தலையில் இருந்து முசிறிக்கும் கார், மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் அதிக அளவில் இருந்தனர். அதிகப்படியான வாகன போக்குவரத்து இருந்ததை பார்த்தபோது, குளித்தலை பகுதி வழக்கமான நாட்களை போலவே நேற்று காணப்பட்டது.

குளித்தலை பகுதியில் ஊரடங்கை மீறி வாகனம் ஓட்டிச்சென்ற சுமார் 75-க்கும் மேற்பட்டவர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இருப்பினும் போலீசார் இருப்பதை பார்த்துவிட்டு தங்கள் வாகனத்தை திருப்பிக்கொண்டு பலர் மாற்றுவழியில் சென்றனர். குளித்தலை பகுதிகளில் முழு ஊரடங்கு அன்று மூடப்பட்டு வந்த பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும், நேற்று வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பப்பட்டன.

கடைகளில் விற்பனை

நொய்யல் பகுதியில் குறுக்குச்சாலை, புன்னம்சத்திரம், குட்டக்கடை, மரவாபாளையம், கரைப்பாளையம், தவுட்டுப்பாளையம், புகளூர், சேமங்கி, தளவாபாளையம், ஆலமரத்துமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், ஓட்டல்கள், டீக்கடைகள், பலகார கடைகள், ஜவுளிக்கடைகள், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் கடைகள், இரும்பு, பெயிண்ட் மற்றும் மரக்கடைகள், காய்கறி கடைகள், ஆடு, கோழி, வாத்து இறைச்சி கடைகள் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பால் கடைகள், மருந்து கடைகள், மருத்துவமனைகள் செயல்பட்டன.

முத்தனூர், நொய்யல் குறுக்குச்சாலை, நத்தமேடு, புன்னம்சத்திரம் பகுதிகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. தவுட்டுப்பாளையம் - கரூர் தேசியநெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம், மற்றும் பாலத்துறை அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பாட்டில்கள், கேன்களில் பெட்ரோல், டீசலை பிடித்து விற்பனை செய்தனர். தவுட்டுப்பாளையம் பகுதியில் ஓட்டல்கள், பேக்கரிகள், பெட்டிக்கடைகளில் பார்சல் விற்பனை நடைபெற்றது. நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் தங்கு தடையின்றி சென்று வந்தன.

முழு ஊரங்கையொட்டி வேலாயுதம்பாளையம், தளவாப்பாளையம், தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், புகளூர் ஆகிய பகுதிகளில் டீக்கடை, பேக்கரி, காய்கறி கடைகள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. ஆட்டோக்கள், வாடகை கார்கள் ஓடவில்லை. மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள் செயல்பட்டன.

Next Story