பாடகி லதா மங்கேஷ்கர் வசித்து வரும் கட்டிடத்துக்கு ‘சீல்’ கொரோனா தடுப்பு நடவடிக்கை


பாடகி லதா மங்கேஷ்கர் வசித்து வரும் கட்டிடத்துக்கு ‘சீல்’ கொரோனா தடுப்பு நடவடிக்கை
x
தினத்தந்தி 30 Aug 2020 11:58 PM GMT (Updated: 30 Aug 2020 11:58 PM GMT)

கொரோனா தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் வசித்து வரும் கட்டிடத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் ஆட்கொல்லி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் 90 வயதான பழம்பெரும் பாடகி லதாமங்கேஷ்கர் வசித்து வரும் தென்மும்பை பெடடர் ரோட்டில் உள்ள பிரபுகன்ச் கட்டிடத்துக்கு மாநகராட்சி ‘சீல்’ வைத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் லதா மங்கேஷ்கர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவின. இந்தநிலையில் கட்டிடத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது குறித்து பாடகி லதா மங்கேஷ்கர் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாங்கள் வசிக்கும் பிரபுகன்ச் பகுதி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதா? என்று பலரும் எங்களிடம் தொலைபேசியில் கேட்டுவருகின்றனர். நாங்கள் வசிக்கும் கட்டிடத்தில் முதியோர்கள் பலர் இருப்பதால் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக எங்கள் கட்டிடத்துக்கு ‘சீல்’ வைத்துள்ளனர். வழக்கமாக நாங்கள் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கூட இந்த முறை மிகவும் எளிமையாக சமூக இடைவெளியுடனே கொண்டாடினோம்.

எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக வரும் போலி செய்திகளை தயவுசெய்து நம்பவேண்டாம். நாங்கள் எங்கள் கட்டிடத்தில் வசிக்கும் அனைத்து முதியோர்களின் நலனுக்கும், பாதுகாப்புக்கும் தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். கடவுளின் கிருபையாலும், உங்கள் அனைவரது வாழ்த்தாலும், எங்கள் குடும்பம் பாதுகாப்பாக உள்ளது. இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.


Next Story