தளர்வு இல்லா முழு ஊரடங்கு சேலத்தில் கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின


தளர்வு இல்லா முழு ஊரடங்கு சேலத்தில் கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 31 Aug 2020 6:50 AM IST (Updated: 31 Aug 2020 6:50 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் நேற்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் வாகன போக்குவரத்து இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

சேலம்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் நேற்று 11-வது முறையாக தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் வீதிகள் மற்றும் தெருக்களில் வெளியே வராமல் தங்களது வீடுகளில் முடங்கினர். சாலைகளில் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

மருத்துவமனைகள், மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு இருந்தன. சேலம் மாநகராட்சி, 4 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் மற்றும் 20 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

கடைகள் அடைப்பு

சேலம் மாநகரில் கடைவீதி, செவ்வாய்பேட்டை, லீ பஜார், பால் மார்க்கெட், சூரமங்கலம், அழகாபுரம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை உள்பட அனைத்து பகுதிகளிலும் காய்கறி, மளிகை கடைகள், உணவகங்கள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் சேலம் மாநகரில் சாலைகளில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் உழவர் சந்தைகள் மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட்டுகளும் திறக்கப்படவில்லை.

மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. சேலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஈரடுக்கு மேம்பாலம் உள்பட அனைத்து மேம்பாலங்களும் வெறிச்சோடி காணப்பட்டது. சேலத்தில் மருத்துவமனை, மருந்து கடைகள், பால் விற்பனை நிலையம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வந்தனர். மாநகர் முழுவதும் ஆங்காங்கே போலீசார் சாலைகளில் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவையில்லாமல் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் வெளியே சுற்றியநபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

கண்காணிப்பு

இதேபோல் ஓமலூர், தாரமங்கலம், மேட்டூர், கொளத்தூர், ஆத்தூர், வாழப்பாடி, சங்ககிரி, எடப்பாடி, மேச்சேரி, கெங்கவல்லி, ஏற்காடு உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கால் அனைத்து பகுதிகளில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

சேலத்தில் தடையை மீறி இறைச்சி, மீன் கடைகள் திறக்கப்பட்டு உள்ளதா? என மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story