முழு ஊரடங்கு: நீலகிரியில் கடைகள் மூடல்; சாலைகள் வெறிச்சோடின


முழு ஊரடங்கு: நீலகிரியில் கடைகள் மூடல்; சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 31 Aug 2020 2:00 AM GMT (Updated: 31 Aug 2020 2:00 AM GMT)

முழு ஊரடங்கால் நீலகிரியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடியது.

ஊட்டி,

தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நடப்பு மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு உத்தரவிட்டது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 5-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதை மீறி வெளியே வாகனங்களில் யாரேனும் சுற்றுகிறார்களா, அவசிய காரணமின்றி சாலைகளில் நடமாடுகிறார்களா என்று போலீசார் கண்காணித்தனர். ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஊட்டி நகரில் பால் விற்பனை கடைகள், மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன. பொதுமக்கள் சிலர் அத்தியாவசிய தேவையான பால் மற்றும் மருந்து, மாத்திரைகளை வாங்கி சென்றதை காண முடிந்தது. மதியத்திற்கு பின்னர் ஆட்கள் வராததால் பால் விற்பனை கடைகள், மருந்து கடைகள் அடைக்கப்பட்டன. ஊட்டியில் காய்கறி, மளிகை பொருட்கள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டது. ஊட்டி மெயின் பஜாரில் துணிக்கடைகள், நகைக்கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.

பொதுமக்கள் ஒத்துழைப்பு

ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் செயல்படும் உழவர் சந்தை கடைகள் தார்ப்பாய் மூலம் மூடப்பட்டு இருந்தது. நகராட்சி மார்க்கெட்டில் உள்ள 18 நுழைவு வாயில்களும் பூட்டு போட்டு அடைக்கப்பட்டன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ் சந்திப்பு, ஏ.டி.சி. லோயர் பஜார், மணிக்கூண்டு, பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகள் ஆட்கள் நடமாட்டம் இல்லாமலும், வாகன போக்குவரத்து இன்றியும் வெறிச்சோடிய நிலையில் காட்சி அளித்தது. முழு ஊரடங்கால் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட முட்டைகோஸ், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் ஆங்காங்கே சரக்கு வாகனங்களில் ஏற்றப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நள்ளிரவுக்கு மேல் அந்த வாகனங்கள் வெளியிடங்களுக்கு புறப்பட்டு சென்றன. முழு ஊரடங்கால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்.

கூடலூர் பகுதியில் முழு ஊரடங்கு

கூடலூரில் முழு ஊரடங்கையொட்டி அனைத்துக் கடைகளும் வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தது. மேலும் ஆட்டோ ஜீப்புகள் சுற்றுலா வாகனங்கள் உள்பட தனியார் வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் கூடலூரில் இருந்து மைசூரு, ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் கேரளா செல்லும் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல் அத்தியாவசிய தேவைகளான பால் மருந்து உள்ளிட்ட கடைகள் காலையில் திறக்கப்பட்டது. ஆனால் மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும்பாலான மருந்துக் கடைகளை அதன் உரிமையாளர்கள் அடைத்து விட்டு வீடு திரும்பினர். மேலும் கூடலூரில் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்புக்கு நின்றிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வந்த சிலரை பிடித்து எச்சரித்து வந்த வழியாக திருப்பி அனுப்பினர். இதேபோல் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளான தொரப்பள்ளி, மசினகுடி, ஓவேலி, தேவர்சோலை மற்றும் பந்தலூர் தாலுகா என அனைத்து இடங்களிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. மேலும் கூடலூர் கேரளா எல்லைகள் மற்றும் கர்நாடக எல்லையான கக்கநல்லாவில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story