விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கில் கடைகள் அடைப்பு


விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 31 Aug 2020 7:47 AM IST (Updated: 31 Aug 2020 7:47 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. ஆனால் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் தடையின்றி கார்களில் பயணித்ததை பார்க்க முடிந்தது.

கள்ளக்குறிச்சி,

உலகத்தில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இதன் பரவல் வேககத்தை கட்டுப்படுத்தி மனித குலத்தை மீட்க கொரோனாவுக்கு தடுப்பு மருந்து மற்றும் தடுப்பு ஊசிகள் உருவாக்குவதில் மருத்துவ நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தடுப்பு மருந்துகள் வரும் வரையில், தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க தேவையான ஆக்கப்பூர்வ நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும், கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. 7-ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இந்த மாதத்தில்(ஆகஸ்டு) வரும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, மாதத்தில் இறுதி ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஒருநாள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.

கடைகள் அடைப்பு

விழுப்புரம் நகரில் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்க்குகள் என்று அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்தகங்கள் மற்றும் பால் விற்பனை நிலையங்கள் மட்டும் திறந்து இருந்ததை பார்க்க முடிந்தது. வாகன போக்குவரத்து எதுவும் இன்றி நகரில் பிரதான சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதும். ஆனால் அந்த கடைகளும் நேற்று திறக்கப் படாததால் அசைவ பிரியர்கள் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளானார்கள். இதேபோல் விக்கிரவாண்டி, செஞ்சி, திண்டிவனம் என்று மாவட்டம் முழுவதிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

வாகன போக்குவரத்து அதிகரிப்பு

அதே வேளையில் நேற்று தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து சற்று அதிகமாக இருந்தது. ஏனெனில் தற்போது விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதேவேளையில், நேற்று முகூர்த்த நாள் என்பதாலும் பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள பஸ், ரெயில் போக்குவரத்து இல்லாததால் வாடகை மற்றும் சொந்த கார்களில் பயணித்தனர்.இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் கணிசமான அளவுக்கு வாகன போக்குவரத்து இருந்தது.

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை பொறுத்தவரை சாதாரண நாட்களில் நாள் ஒன்றுக்கு, 35,000 வாகனங்கள் வரைக்கும் கடந்து செல்வதுண்டு. ஆனால் நேற்று சுமார் 17,000 வாகனங்கள் கடந்து சென்றுள்ளது. குறிப்பாக நள்ளிரவு 12 மணி முதல் நேற்று அதிகாலை 6 மணிக்குள் 4,000 வாகனங்கள் சென்று இருக்கிறது. இதன் மூலம், பொதுமக்கள் பழைய சகஜமான நிலைக்கு திரும்பி வருவதுடன், தொற்றுடன் வாழ பழகி கொண்டு வருவதும் தெரியவந்துள்ளது. முழுஊரடங்கின் போது, காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். விழுப்புரத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

திண்டிவனம்

இதேபோல் செஞ்சியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் தேவையின்றி சுற்றி வந்தவர்களை எச்சரித்தும், அபராதம் விதித்தும் அனுப்பி வைத்தனர். திண்டிவனம், அனந்தபுரம், ஆலம்பூண்டி, நாட்டார்மங்கலம் ஆகிய பகுதிகளிலும் முழு ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கள்ளக்குறிச்சி

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் நேற்று ஒரு நாள் முழு ஊரடங்கு நடைபெற்றது. இதன் காரணமாக கள்ளக்குறிச்சி நகர பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டதால் கள்ளக்குறிச்சி நகரத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ரிஷிவந்தியம் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக அந்தந்த பகுதியில் உள்ள சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

Next Story