பாகூர் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை மின்சாரம் தாக்கி வாலிபர் பலி


பாகூர் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 2 Sept 2020 3:56 AM IST (Updated: 2 Sept 2020 3:56 AM IST)
t-max-icont-min-icon

பாகூர் பகுதியில் திடீரென்று சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. பனை, தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் தாக்கியதில் வாலிபர் பலியானார்.

பாகூர்,

புதுவை மாநிலம் பாகூர் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்தது. நேற்று காலையில் வெயில் வெளுத்து வாங்கியது. மதியம் 12 மணியளவில் திடீரென்று சூறைக்காற்று வீசியது. சிறிது நேரத்தில் வானில் மேகங்கள் திரண்டு மழை கொட்டியது. இந்த மழை சுமார் 15 நிமிடம் மட்டுமே கொட்டியது.

சூறைக்காற்றால் தவளக்குப்பம், ரெட்டிச்சாவடி, கிருமாம்பாக்கம், பாகூர், அரங்கனூர் ஆகிய பகுதியில் சாலையோரம் இருந்த பனை, தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. பாகூர்- கன்னியக்கோவில் சாலையில் சித்தேரி பகுதியில் பனைமரம் ஒன்று சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. சூறைகாற்றின்போது சாலையில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் சிலர் தூக்கி வீசப்பட்டனர். ஒரு சிலர் மழைக்கு பயந்து ஆங்காங்கே இருந்த கட்டிடங்களின் ஓரங்களில் ஒதுங்கி நின்றனர்.

நெற்பயிர்கள் சேதம்

இதேபோல் சித்தேரி - குருவிநத்தம் சாலையில் தாங்கல் ஏரி பகுதியில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்ததில் அந்த வழியாக சென்ற உயர்அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பலத்த காற்றால் பாகூர், அரங்கனூர், இருளஞ்சந்தை, கரையாம்புத்தூர், அபிஷேகப்பாக்கம் ஆகிய பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் அடியோடு சாய்ந்தன. பல இடங்களில் அறுவடை செய்து களங்களில் உலர்த்தப்பட்டிருந்த நெல் மணிகள் மழையில் நனைந்தது. அறுவடை நேரத்தில் சூறைக்காற்றுடன் மழை கொட்டியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

மின்சாரம் துண்டிப்பு

சுமார் 15 நிமிடம் மட்டுமே பெய்த மழை மற்றும் சூறைக்காற்றால் பெரிய அளவில் சேதமடைந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சேதங்கள் பற்றி தகவல் அறிந்த பொதுப்பணித்துறை, தீயணைப்பு வீரர்கள் விரைந்த வந்து பாகூர் - கன்னியக்கோவில் சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த பனைமரத்தை துண்டு துண்டாக வெட்டி அகற்றினர். இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

அறுந்து கிடந்த மின்கம்பியை சீரமைக்கும் பணியில் மின்துறை ஊழியர்கள் முழு வீச்சில் செயல்பட்டனர். இதன் காரணமாக இரவில் மின் இணைப்பு வழங்கப்பட்டது. பல இடங்களில் நள்ளிரவுக்கு மேலும் மின் வினியோகம் சீராகாததால் மக்கள் அவதிப்பட்டனர்.

வாலிபர் சாவு

இந்த சூறைக்காற்றின்போது பாகூரை சேர்ந்த பழனி என்பவரின் மகன் விஜய் (22), குருவிநத்தத்தை சேர்ந்த ராமநாத் ஆகியோர் சித்தேரி மாஞ்சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மின்கம்பி அறுந்து விழுந்ததில் விஜய் உடல்கருகி பலியானார். ராமநாத் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story