கடைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்: வானகரம் பூ மார்க்கெட்டில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்


கடைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்: வானகரம் பூ மார்க்கெட்டில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Sept 2020 5:51 AM IST (Updated: 3 Sept 2020 5:51 AM IST)
t-max-icont-min-icon

கடைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்: வானகரம் பூ மார்க்கெட்டில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் சாலையில் பூக்களை கொட்டி மறியல்.

பூந்தமல்லி,

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேடு சந்தை மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை வானகரத்தில் தற்காலிக பூ மார்க்கெட் அமைக்கப்பட்டு பூ வியாபாரிகள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கடைகள் மற்றும் வாகனங்களுக்கு கூடுதல் வாடகை கட்டணம் கேட்கப்படுவதாக கூறி வானகரம் மார்க்கெட் வளாகத்தில் நேற்று வியாபாரிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து மார்க்கெட் வளாகம் முன்பாக உள்ள சாலையில் பூக்களை கொட்டி, திடீர் மறியலும் செய்தனர்.

இது குறித்து பூ வியாபாரிகள் சிலர் கூறியதாவது:-

வானகரம் பூ மார்க்கெட்டில் சிலர் புகுந்து கடைகளுக்கும், உள்ளே வரும் வாகனங்களுக்கும் கூடுதல் கட்டணம் கேட்டு மிரட்டி வருகிறார்கள். அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. எனவேதான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறோம். ஏற்கனவே வாழ்வாதாரம் இழந்து வியாபாரிகள் பரிதவித்து வரும் சூழ்நிலையில் இதுபோன்ற கட்டண கொள்ளையை எங்களால் ஏற்க முடியாது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story