மூணாறு நிலச்சரிவில் இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு அர்ஜூன் சம்பத் ஆறுதல்


மூணாறு நிலச்சரிவில் இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு அர்ஜூன் சம்பத் ஆறுதல்
x
தினத்தந்தி 3 Sept 2020 7:15 AM IST (Updated: 3 Sept 2020 7:15 AM IST)
t-max-icont-min-icon

மூணாறு நிலச்சரிவில் இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு அர்ஜூன் சம்பத் ஆறுதல் கூறினார்.

கயத்தாறு,

கேரள மாநிலம் மூணாறு அருகே நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி, அங்கு தங்கியிருந்த தமிழகத்தைச் சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 66 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் மாயமான 4 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்த 33 பேரும் உயிரிழந்தனர்.

இதையடுத்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று கயத்தாறு பாரதி நகருக்கு சென்று, நிலச்சரிவில் சிக்கி இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிதி உதவி வழங்கினார். மேலும் அவர்களுக்கு புதிய துணிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களையும் வழங்கினார்.

பின்னர் அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-

விரைவில் நிதி உதவி வழங்க...

மூணாறு நிலச்சரிவில் சிக்கி இறந்த தமிழர்களுக்கு மத்திய, மாநில அரசுகளும், சம்பந்தப்பட்ட தேயிலை தோட்ட நிறுவனமும் நிவாரண உதவி அறிவித்துள்ளது. ஆனாலும் இன்னும் அவர்களுக்கு எந்த நிதியும் கிடைக்கவில்லை. எனவே பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு விரைவில் நிவாரண உதவி வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்புநிதி, பணபலன்கள் போன்றவையும் குடும்பத்தினருக்கு முறையாக வழங்க வேண்டும். இல்லையெனில் இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

கயத்தாறு திருநீலகண்ட ஈசுவரர் கோவிலில் ரூ.1 கோடியே 34 லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனாலும் அங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. எனவே அங்குள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும். கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் அருகில் கார்மேக புலவர் தங்கிய மண்டபத்தை சிலர் அகற்றினர். அங்கு மீண்டும் மண்டபத்தை உடனே கட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, மாவட்ட தலைவர் உடையார், மாவட்ட செயலாளர் லட்சுமிகாந்தன், மாநில துணை தலைவர்கள் குணசீலன், வசந்தகுமார், மாநில இளைஞர் அணி செயலாளர் செல்வசுந்தர், ஒன்றிய தலைவர் செல்லத்துரை, ஒன்றிய செயலாளர் பால்ராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story