தந்தை-மகன் கொலை வழக்கு மீண்டும் சூடுபிடித்தது: கோவில்பட்டி போலீஸ் நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை - மருத்துவ அதிகாரியிடமும் விவரம் சேகரிப்பு


தந்தை-மகன் கொலை வழக்கு மீண்டும் சூடுபிடித்தது: கோவில்பட்டி போலீஸ் நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை - மருத்துவ அதிகாரியிடமும் விவரம் சேகரிப்பு
x
தினத்தந்தி 3 Sep 2020 11:30 PM GMT (Updated: 3 Sep 2020 6:21 PM GMT)

தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக, கோவில்பட்டி போலீஸ் நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மருத்துவ அதிகாரியிடமும் விசாரித்து விவரம் சேகரித்தனர். இதனால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்தது.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர்.

பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைதான போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனாவால் இறந்ததை தொடர்ந்து, மற்ற 9 போலீசார் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. மதுரையில் முகாமிட்டு விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. எனினும் மாற்று சி.பி.ஐ. அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் கிடைத்த தடயங்களை உறுதிப்படுத்தும் வகையில், சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பென்னிக்சின் தாயார் செல்வராணியை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு வரவழைத்து, அவரிடம் ரத்த மாதிரி சேகரித்தனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு பிரேத பரிசோதனை நடத்திய டாக்டர்களிடமும் விசாரித்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டவர்களிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். இதனால் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு நேற்று மதியம் 3.45 மணிக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் வந்து விசாரணையை தொடங்கினர். சம்பவம் நிகழ்ந்த தினத்தில் பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகிய 2 பேரும் உடலில் காயங்களுடன் கோவில்பட்டி கிளை சிறையில் இருந்து, கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுகுறித்து கோவில்பட்டி கிளை சிறை அதிகாரி சங்கர் அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுதேசன் வழக்குப்பதிவு செய்தார்.

இதுதொடர்பான ஆவணங்களை பார்வையிட்ட சி.பி.ஐ. அதிகாரிகள், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசனிடம் விசாரணை நடத்தினர். தந்தை -மகன் ஆகியோரது உடல் களை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்தபோது, கோவில்பட்டி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் முருகன், போலீஸ்காரர்கள் கருப்பசாமி, சிவகுமார் ஆகியோரும் உடன் இருந்தனர். எனவே, சப்-இன்ஸ் பெக்டர் முருகன், போலீஸ்காரர்கள் கருப்பசாமி, சிவகுமார் ஆகியோரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர்.

தொடர்ந்து அங்கு தூத்துக்குடி மாவட்ட மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குனர் பொன் இசக்கி, துணை இயக்குனரின் உதவியாளர் முத்து விநாயகம், கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி செவிலியர் வனஜா ஆகியோரை வரவழைத்து, அவர்களிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தி விவரங்களை சேகரித்தனர்.

மேலும், கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் தந்தை -மகனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம் குறித்து விசாரித்து வாக்குமூலம் பெற்றனர். சி.பி.ஐ. அதிகாரிகளின் இந்த விசாரணை இரவு வரை நீடித்தது.

Next Story