நெல்லையில்அரசு விரைவு பஸ்களை இயக்க ஏற்பாடு இருக்கைகளில் கிருமிநாசினி தெளிப்பு


நெல்லையில்அரசு விரைவு பஸ்களை இயக்க ஏற்பாடு இருக்கைகளில் கிருமிநாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 4 Sept 2020 4:30 AM IST (Updated: 4 Sept 2020 2:57 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் அரசு விரைவு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி பஸ்களில் கிருமிநாசினி தெளித்தனர்.

நெல்லை,

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் முடக்கப்பட்டிருந்த பஸ் போக்குவரத்து கடந்த 1-ந்தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. தற்போது டவுன் பஸ்கள், புறநகர் பஸ்கள் அந்தந்த மாவட்டத்துக்கு உள்ளேயே இயக்கப்பட்டு வருகிறது. பக்கத்து மாவட்டங்களுக்கு செல்கிறவர்கள், மாவட்ட எல்லையில் இறங்கி, அடுத்த மாவட்ட எல்லைக்குள் சென்று, மாற்று பஸ்களில் தொடர் பயணம் மேற்கொள்கிறார்கள். மேலும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்ததால், பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் கட்டுமான பணிகள் நடப்பதால், அருகில் உள்ள ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து தற்போது புறநகர் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று அங்கிருந்து இயக்கப்பட்ட பஸ்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்தது. ஒருசில முக்கிய வழித்தட பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மினி பஸ்களிலும் பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்தனர். இதையொட்டி அங்கு நேற்றும் கூடுதலாக 10 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.

பாபநாசம், திசையன்விளை, காவல்கிணறு, ஆலங்குளம், வன்னிக்கோனேந்தல், வசவப்புரம், செய்துங்கநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று (வெள்ளிக்கிழமை) சுபமுகூர்த்த நாள் என்பதால், திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் அதிகம் நடக்க உள்ளன.

இதையொட்டி இன்று தேவைக்கு ஏற்ப மேலும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் வருகிற 7-ந்தேதி முதல் மாவட்ட எல்லைகளை கடந்து, வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதையொட்டி தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களும் 7-ந்தேதி முதல் இயக்கப்படுகின்றன. இதையொட்டி அவற்றை தயார்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் அனைத்து விரைவு பஸ்களையும் கழுவி சுத்தம் செய்தனர். பஸ்சின் உள்பகுதியில் இருக்கைகள் மற்றும் அனைத்து பகுதியிலும் கிருமிநாசினி தெளித்தனர்.

இதேபோல் கே.டி.சி. நகர், பாபநாசம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதியில் இருக்கும் விரைவு போக்குவரத்து கழக பணிமனைகளிலும் பஸ்களை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த பஸ்களில் பயணிகள்கைகளை கழுவுவதற்கும், கிருமிநாசினியை கையில் தடவிக் கொள்வதற்கும் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பஸ் டிக்கெட் முன்பதிவு மற்றும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்பாக, அரசு வழிகாட்டுதல் நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் முதல் நாளான 1-ந்தேதி 300 பஸ்கள் இயக்கப்பட்டன. பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் நேற்று முன்தினம் 360 பஸ்களும், 3-வது நாளான நேற்று மேலும் 40 பஸ்களும் இயக்கப்பட்டன.

இதில் 2 நாட்களில் பயணிகள் கட்டணமாக ரூ.35 லட்சம் வசூலாகி உள்ளது. முதல் நாளில் ரூ.12 லட்சமும், 2-வது நாளில் ரூ.23 லட்சமும் வசூலாகி உள்ளது என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story