கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க ஆலோசனை நாராயணசாமி தலைமையில் நடந்தது


கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க ஆலோசனை நாராயணசாமி தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 4 Sept 2020 7:13 AM IST (Updated: 4 Sept 2020 7:13 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரிசோதனைகளை அதிகரிப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை நடந்தது.

புதுச்சேரி,

புதுவையில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் அதிகரித்து வருகிறது. தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை விரைவில் கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க சோதனை எண்ணிக்கையை அதிகரிக்கப்போவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் செப்டம்பர் மாதம் தொடங்கியது முதல் தொற்று பரிசோதனை குறைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்துக்காட்ட பரிசோதனை குறைக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் உண்மையிலேயே தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதற்கிடையே புதுவையில் ஆய்வு செய்த ஜிப்மர் மருத்துவக்குழு, மத்திய விஞ்ஞானிகள் குழு ஆகியன சோதனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த அறிவுறுத்தி உள்ளது. இந்தநிலையில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ், வளர்ச்சி, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு ஆணையர் அன்பரசு, முதல்-அமைச்சரின் செயலாளர் விக்ராந்த்ராஜா, கலெக்டரும், சுகாதாரத்துறை செயலாளருமான அருண், இயக்குனர் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அப்போது தொற்று பாதித்தவர்களை கண்டறிய நாள்தோறும் படிப்படியாக 3 ஆயிரம் பரிசோதனைகள் வரை செய்ய அதிகாரிகளுக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.

Next Story