பல்லடத்தில் கடன் பிரச்சினையால் வீடு இடிப்பு


பல்லடத்தில் கடன் பிரச்சினையால் வீடு இடிப்பு
x
தினத்தந்தி 4 Sept 2020 6:46 PM IST (Updated: 4 Sept 2020 6:46 PM IST)
t-max-icont-min-icon

பல்லடத்தில் கடன் பிரச்சினையால் வீடு இடித்து தள்ளப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது.

பல்லடம்,

பல்லடம் கொசவம்பாளைய பகுதியை சேர்ந்த சங்கர கவுண்டரின் மகன் ராஜேஸ்வரன் (வயது 48). இவரது மனைவி கவிதா (40). இவர்கள் 3½ சென்ட் பூர்வீக நிலத்தில் உள்ள வீட்டில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். சங்கரகவுண்டர் கடந்த 2010-ம் ஆண்டு தாராபுரத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவரிடம் நிலப்பத்திரத்தை அடமானம் செய்து கொடுத்து ரூ.10 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

அதற்கு மாத,மாதம் வட்டியும் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் இருவருக்கும் கடன் கொடுக்கல், வாங்கலில் பிரச்சினை ஏற்பட்டு அது தொடர்பாக திருப்பூர் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சங்கரகவுண்டர் இறந்து விட்டதால், வழக்கை ராஜேஸ்வரன் குடும்பத்தினர் நடத்திவருகின்றனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வந்த மர்ம கும்பல் வீடு புகுந்து ராஜேஸ்வரன் அவரது மனைவி கவிதா, மற்றும் மகன் உள்ளிட்டோரை கத்தி, அரிவாள் போன்றவைகளை காட்டி மிரட்டி வீட்டை விட்டு வெளியே வரவழைத்துள்ளனர். பின்னர் அந்த வீட்டை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்துள்ளனர்.இதனால் 2 கடைகள், மற்றும் வீட்டின் ஒருபகுதி சேதமடைந்தது. நள்ளிரவில் பொக்லைன் எந்திரம் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த மர்மக்கும்பல் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து பல்லடம் போலீசில் கவிதா புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story