நாட்டு வெடிகுண்டு வெடித்து பெண் படுகாயம் அடைந்த வழக்கில் 2 பேர் கைது


நாட்டு வெடிகுண்டு வெடித்து பெண் படுகாயம் அடைந்த வழக்கில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 Sept 2020 9:14 PM IST (Updated: 4 Sept 2020 9:14 PM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து பெண் படுகாயம் அடைந்த வழக்கில் தேடப்பட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டை அடுத்த மேல்பட்டி லட்சுமி அம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி, விவசாயி. இவருடைய மனைவி சந்திரா (வயது 45). இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் லட்சுமி அம்மாள்புரம் மலையடிவாரப் பகுதியில் உள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி சந்திரா பசு மாடுகளை விவசாய நிலத்தில் மேய்த்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த பாறை இடுக்கில் ஒரு பிளாஸ்டிக் டப்பா இருப்பதைக் கண்டார்.

அந்தப் பிளாஸ்டிக் டப்பாவை திறந்து பார்த்தபோது, அதற்குள் காகிதத்தில் சுற்றப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை கையில் எடுத்துப் பார்த்தபோது, திடீரென வெடித்து சிதறியது. அதில் சந்திராவின் கழுத்து மற்றும் இடது கையில் 2 விரல்களில் படுகாயம் ஏற்பட்டது.

இதுகுறித்து பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், மேல்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் குமரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நாட்டு வெடிகுண்டு வைத்த மர்ம ஆசாமிகள் யார்? என விசாரணை நடத்தி தேடி வந்தனர்.

அதே கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியான வெங்கடேசன் (38) மற்றும் இவருடைய நண்பரும், பால் வியாபாரியான மகேந்திரன் (36) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். வெங்கடேசன் தனது நிலத்தில் வேர்க்கடலை பயிரிட்டுள்ளார். அந்தப் பயிரை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வந்தன.

காட்டுப்பன்றிகளை கொல்ல வெங்கடேசன், மகேந்திரனுடன் சேர்ந்து மாங்கொட்டையில் நாட்டு வெடி குண்டுகளை தயாரித்து, அதை அங்குள்ள பாறை இடுக்கில் வைத்ததாக தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு குடியாத்தம் சப்-மாஜிஸ்த்திரேட் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர்.

Next Story