பாண்லே தினக்கூலி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு


பாண்லே தினக்கூலி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Sept 2020 2:24 AM IST (Updated: 5 Sept 2020 2:24 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி பாண்லே தினக்கூலி ஊழியர்கள் சம்பளம் ரூ.176 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு கூட்டுறவு நிறுவனமான பாண்லே சார்பில் பால், ஐஸ்கிரீம், நெய் உள்பட பல்வேறு பால்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிதாக பாண்லே மில்க் பிரெட், மஞ்சள் செறிவூட்டிய பால் மற்றும் 100 மி.லி. நெய் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிமுக விழா நேற்று மாலை சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு புதிய பொருட்களை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் பேசும்போது, “பாண்லே நிறுவனத்தில் தற்போது 3 பொருட்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களுக்கு தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.130 சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. அது இனி ரூ.46 உயர்த்தப்பட்டு ரூ.176 ஆக வழங்கப்படும். இதன் மூலம் மாதம் ரூ.4 லட்சம் கூடுதலாக செலவாகும்” என்றார்.

இந்த புதிய பொருட்களை முதன் முதலாக அமைச்சர் கந்தசாமி பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் திப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. கூட்டுறவுத்துறை செயலாளர் அசோக்குமார், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஸ்மிதா, பாண்லே மேலாண் இயக்குனர் சுதாகர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இன்று முதல் கிடைக்கும்

இந்த புதிய பொருட்கள் குறித்து பாண்லே மேலாண் இயக்குநர் சுகாதர் கூறும்போது, ‘பாண்லே மில்க் பிரெட் தரமான பசு வெண்ணெய் மற்றும் பால் பவுடர் கொண்டு 400 கிராம் அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. 200 மி.லி. மஞ்சள் செறிவூட்டிய பால் உற்பத்தியில் இயற்கையான மஞ்சள் பவுடர் கலப்பதால் கொரோனா காலத்துக்கேற்ப நோய் எதிர்ப்பு சக்தி குணங்கள் இருக்கிறது. மற்றொரு தயாரிப்பான 100 மி.லி. நெய் அனைத்து சிறு குடும்பத்தினரும் வாங்கி பயனடையும் வகையில் உள்ளது. இந்த பொருட்கள் நாளை (இன்று சனிக்கிழமை) முதல் அனைத்து பாண்லே பாலகங்களிலும் கிடைக்கும்’ என்றார்.

Next Story