செம்மரக்கட்டைகள் விற்ற பணத்தை பங்கு போடுவதில் தகராறு தொழிலாளி அடித்துக்கொலை


செம்மரக்கட்டைகள் விற்ற பணத்தை பங்கு போடுவதில் தகராறு தொழிலாளி அடித்துக்கொலை
x
தினத்தந்தி 5 Sept 2020 2:53 AM IST (Updated: 5 Sept 2020 2:53 AM IST)
t-max-icont-min-icon

செம்மரக்கட்டைகள் விற்ற பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை கட்டையால் அடித்துக்கொலை செய்த சக தொழிலாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திரு.வி.க.நகர்,

சென்னை கொளத்தூரை அடுத்த சூரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் புகாரி (வயது 43). இவரும், ஓட்டேரியைச் சேர்ந்த சம்பந்தமூர்த்தி (20), உளுந்தூர்பேட்டையை சேர்ந்த செந்தில் (37) ஆகிய 3 பேரும் பழைய கட்டிடங்களை உடைக்கும் வேலை செய்து வந்தனர்.

நேற்று முன்தினம் அயனாவரத்தில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தை 3 பேரும் உடைக்கும் போது அங்கு செம்மரக்கட்டைகள் கிடைத்தது. அவற்றை ரூ.10 ஆயிரத்துக்கு புகாரி விற்றார். பின்னர் அதில் ரூ.5 ஆயிரத்தை புகாரி எடுத்துக்கொண்டு மீதி ரூ.5 ஆயிரத்தை இருவரையும் பிரித்து கொள்ளுமாறு கொடுத்தார்.

அடித்துக்கொலை

நேற்று மதியம் பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் 3 பேரும் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது செம்மரக்கட்டைகள் விற்ற பணத்தை பங்கு போட்டுக்கொள்வதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சம்பந்தமூர்த்தியும், செந்திலும் அருகில் கிடந்த கட்டையால் புகாரியின் தலையில் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தமூர்த்தி மற்றும் செந்திலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story