ஊத்துக்கோட்டையில் பெட்டிக்கடைக்குள் புகுந்த லாரி மீது மற்றொரு லாரி மோதல் டிரைவர்கள் படுகாயம்


ஊத்துக்கோட்டையில் பெட்டிக்கடைக்குள் புகுந்த லாரி மீது மற்றொரு லாரி மோதல் டிரைவர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 4 Sep 2020 9:50 PM GMT (Updated: 4 Sep 2020 9:50 PM GMT)

ஊத்துக்கோட்டையில் பெட்டிக்கடைக்குள் புகுந்த லாரி மீது மற்றொரு சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 2 டிரைவர்களும் படுகாயம் அடைந்தனர்.

ஊத்துக்கோட்டை,

சென்னையிலிருந்து கர்நாடகா மாநிலம் பெல்காம் நகருக்கு எவர்சில்வர் பாத்திரங்கள் தயாரிக்க பயன்படும் மூல பொருட்களை ஏற்றி கொண்டு சரக்கு லாரி ஒன்று நேற்று மாலை புறப்பட்டது. உத்திரபிரதேசத்தை சேர்ந்த டிரைவர் அங்கட்யாதவ் (வயது 28) என்பவர் லாரியை ஓட்டி வந்தார். இதையடுத்து, இரவு 11 மணிக்கு ஊத்துக்கோட்டையில் உள்ள நான்கு ரோடுகள் இணையும் சந்திப்பில் லாரி சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரமாக இருந்த பெட்டிகடைக்குள் புகுந்தது.அதே நேரத்தில் சென்னையிலிருந்து உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவுக்கு டி.வி. உதிரி பாகங்கள் ஏற்றி சென்ற சரக்கு லாரி பெட்டிகடைக்குள் புகுந்து நின்ற லாரி மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இந்த கடை 4 ரோடுகள் சந்திப்பில் உள்ளதால் எப்போதும் கூட்டம் அலைமோதுகிற நிலையில், ஊரடங்கு காரணமாக இரவு 8 மணிக்கு மூடப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் டி.வி. உதிரி பாகங்கள் ஏற்றி வந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த லாரி டிரைவர் கல்லு (19) மற்றும் எவர்சில்வர் பாத்திரங்கள் தயார் செய்யும் மூல பொருட்கள் ஏற்றி வந்த லாரி டிரைவர் அங்கட்யாதவ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த லாரி டிரைவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்த இடத்தையொட்டி மின் கம்பங்கள் உள்ள நிலையில், அதிர்ஷ்டவசமாக லாரிகள் அதன் மீது மோதவில்லை.

இந்த விபத்தில் கடையில் இருந்த குளிர்சாதன பெட்டி உட்பட பல பொருட்கள் நொறுங்கின. இந்த விபத்து காரணமாக ஊத்துக்கோட்டை- சென்னை, ஊத்துக்கோட்டை- திருப்பதி சாலைகள் இடையே சுமார் 1 மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ராட்சத கிரேன் மூலம் லாரிகள் அகற்றப்பட்டு பின்னர் போக்குவரத்து சீரடைந்தது.

Next Story