பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Sept 2020 4:58 AM IST (Updated: 5 Sept 2020 4:58 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் எஸ்.பி.ஞானசேகர் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும், மக்கள் விரோத மின்மசோதா 2020-ஐ ரத்து செய்ய வேண்டும், சுற்றுச்சூழலை சீரழிக்க காத்திருக்கும் வரைவு மசோதாவை வாபஸ் வாங்க வேண்டும், கொரோனா கால 144 தடை சட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், நில அளவை கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்க வேண்டும், உள்ளாட்சி அதிகாரங்களை பறிக்கக்கூடாது, தூத்துக்குடி மாநகரின் வளர்ச்சி பணிகளை தாமதம் இன்றி நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட கட்சி அலுவலக செயலாளர் மாடசாமி, மாநகரக்குழு உறுப்பினர் முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

சிறு, குறு தொழில்களுக்கு வங்கி கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்கள் ஆக உயர்த்தி தினக்கூலியாக ரூ.600 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பேரியக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சரோஜா, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பரமராஜ், நகர துணைச்செயலாளர் அலாவுதீன், நகர குழு உறுப்பினர்கள் முருகேசன், வஜ்ரேஸ்வரி, விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் புதுகிராமம், 24-வது வார்டு, கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

எட்டயபுரம்-ஏரல்

எட்டயபுரம் பட்டத்து விநாயகர் கோவில் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர செயலாளர் சேது தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில் கட்சி உறுப்பினர்கள் ரவீந்திரன், முனியசாமி, ராமசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏரல் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளர் அம்பிகா தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் கோபால், சிவமணி, தாலுகா உறுப்பினர்கள் மாரிமுத்து, கணேசன், ஆண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓட்டப்பிடாரம்

ஓட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் அழகு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், நில அளவை கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும், ஓட்டப்பிடாரம் பகுதியில் விவசாய நிலங்களை காற்றாலை கம்பெனிகள் வாங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும், குறுக்குச்சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும், ஓட்டப்பிடாரத்தில் கோர்ட்டு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், மாவட்டக்குழு உறுப்பினர்கள் விஜயன், செல்வராஜ், ஏ.ஐ.டி.யு.சி. ஒன்றிய செயலாளர் மகராஜன், தமிழ்நாடு விவசாய சங்க பொறுப்பாளர்கள் சவுந்தரபாண்டியன், கணேசமூர்த்தி, சந்தானம், இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் ராஜேஷ்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளாத்திகுளம்

விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாலுகா செயலாளர் பிச்சை தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், நகர செயலாளர் முல்லன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story