கனமழை எதிரொலி: சதுரகிரி மலைப்பகுதியில் கரைபுரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம்


கனமழை எதிரொலி: சதுரகிரி மலைப்பகுதியில் கரைபுரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம்
x
தினத்தந்தி 7 Sept 2020 6:49 AM IST (Updated: 7 Sept 2020 6:49 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் பகுதியில் இரவு முழுவதும் கொட்டிய கன மழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் தாணிப்பாறை பகுதியில் உள்ள அருவிகளில் பொதுமக்கள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

வத்திராயிருப்பு,

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக கன மழை கொட்டியது. இதனால் சதுரகிரி மலைப்பகுதியில் உள்ள அனைத்து நீரோடைகளிலும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

தாணிப்பாறை பகுதியில் உள்ள வழுக்கம்பாறை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் பொதுமக்கள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். சதுரகிரி கோவில் பகுதியில் இருந்து வரும் தண்ணீர், லிங்கம் ஓடை வழியாக மாத்தூர் கண்மாய், ஆலங்குளம் கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களுக்கு செல்லும். மலைப் பகுதியில் இரவு முழுவதும் பெய்த கன மழையால் லிங்கம் ஓடை பகுதியில் அதிக அளவு தண்ணீர் வந்து கல்லணை ஆற்றுப்பாலத்தில் அடைப்பு ஏற்பட்டதால் ஆற்று பாலத்திற்கு அருகில் உள்ள ஆகாசம்பட்டி கிராமத்திற்கு வெள்ள நீர் புகும் அபாயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வத்திராயிருப்பு தாசில்தார் ராமதாஸ் தலைமையிலான வருவாய்த்துறையினர் நள்ளிரவில் ஆற்றுப் பாலத்தில் ஏற்பட்ட அடைப்பினை பொக்லைன் எந்திரம் மூலம் சரி செய்தனர். தாணிப்பாறை செல்லும் வழியில் உள்ள லிங்கம் கோவில் ஓடையில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் அப்பகுதி வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிக்கு செல்லும் விவசாயிகள் மற்றும் பக்தர்கள், மகாராஜபுரம் வழியாக தாணிப்பாறைக்கு மாற்றுப்பாதையில் சென்று வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள சறுக்குப்பாறை அருவி, மினி குற்றாலம் என அழைக்கப்படும் மீன் வெட்டி பாறை அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் அதிக அளவு விழுகிறது. அதேபோல் பேச்சியம்மன் கோவில் பின் பகுதியில் உள்ள ஓடையில் குளிக்கும் அளவுக்கு தண்ணீர் விழுகிறது.

வறட்சியால் காய்ந்து போய் இருந்த செண்பகத்தோப்பு பகுதி தொடர் மழையால் தற்போது பச்சை பசேலென்று காட்சியளிக்கும் சூழலில் அருவி மற்றும் ஓடைகளில் குளித்து மகிழ விடுமுறை தினமான நேற்று ஏராளமான இளைஞர்கள் செண்பகத்தோப்பு பகுதியில் முற்றுகையிட்டு குளித்து மகிழ்ந்தனர்.

கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் மலைப்பகுதியில் பெய்த கன மழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மற்றும் அருவி பகுதியில் குளித்தவர்கள் உட்பட 9 பக்தர்கள் சிக்கி உயிரிழந்தனர். அதற்குப் பின்னர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை காரணமாக தற்போதுதான் காட்டாற்று வெள்ளம் அதிகமாக ஏற்பட்டுள்ளது.

இதனால் இப்பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வந்ததால் இப்பகுதியில் விவசாயம் செய்யும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள் தவிர பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story