தஞ்சை-மதுரைக்கு இன்று முதல் அரசு பஸ்கள் இயக்கம்


தஞ்சை-மதுரைக்கு இன்று முதல் அரசு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 7 Sept 2020 8:10 AM IST (Updated: 7 Sept 2020 8:10 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் இருந்து 5 மாதங்களுக்கு பிறகு மதுரை, திருப்பூருக்கு இன்று(திங்கட்கிழமை) முதல் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தஞ்சாவூர்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அன்று முதல் பஸ்கள் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் ஜூன் மாதம் மண்டலங்களுக்கு இடையே அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் மாவட்டத்திற்குள் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மக்களின் வேண்டுகோளை ஏற்று மாவட்டங்களுக்கு இடையே இன்று(திங்கட்கிழமை) முதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தஞ்சை விரைவு போக்குவரத்து கழகத்தில் 22 பஸ்கள் உள்ளன.

இவைகள் சென்னை, புதுச்சேரி, திருப்பதி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்தன. ஆனால் இன்று முதல் சென்னைக்கு மட்டுமே விரைவு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதுவும் முதல் நாளில் 9 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் கும்பகோணம் மண்டல அரசு போக்குவரத்து கழக பஸ்களும் பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன. தஞ்சை கரந்தையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 50 அரசு பஸ்கள் உள்ளன.

இவைகளில் 15 பஸ்கள், பட்டுக்கோட்டை, பேராவூரணி, புதுக்குடி, அற்புதாபுரம், கோவில்வெண்ணி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. இன்று முதல் தஞ்சையில் இருந்து மதுரை, திருப்பூர், வேளாங்கண்ணி, திருச்சி, வேலூர், காஞ்சிபுரம், திருச்செந்தூர் ஆகிய ஊர்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே இயக்கப்படும் பஸ்களுடன் சேர்த்து 35 பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் பயணிகள் வரவில்லை என்றால் பஸ்களின் எண்ணிக்கையை குறைக்கவும் போக்குவரத்து கழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் தூய்மைப்படுத்தப்பட்டு கரந்தை பணிமனையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு கையுறை, முககவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதேபோல் கும்பகோணத்தில் இருந்து சிதம்பரம், சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, 60 சதவீத பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். பயணிகளிடம் வரவேற்பு இருந்தால் அதே எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படும். பயணிகளிடம் ஆர்வம் இல்லை என்றால் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படும். பயணிகள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்றனர்.

Next Story