வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 300 அரசு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்


வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 300 அரசு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 7 Sept 2020 9:45 AM IST (Updated: 7 Sept 2020 9:45 AM IST)
t-max-icont-min-icon

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் இருந்து மாவட்டத்தின் உள்ளேயும், வெளிமாவட்டங்களுக்கும் 300 அரசு பஸ்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் இயக்கப்படுகிறது என்று வேலூர் மண்டல போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்,

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பஸ்போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. கடந்த 1-ந் தேதி முதல் பல்வேறு கட்டுபாடுகளுடன் மாவட்டத்துக்குள் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வேலூர் மண்டல போக்குவரத்துக்கழக கட்டுப்பாட்டில் உள்ள வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்குள் 120 பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முதல் மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் இருந்து சென்னை, காஞ்சீபுரம், திருப்பத்தூர், மதுரை, திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. வேலூர் பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் உள்ளே மற்றும் பிற மாவட்டங்களுக்கு என்று 100 அரசு பஸ்கள் இயக்கப்படும்.

அதேபோன்று ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்தும் தலா 100 பஸ்கள் முதற்கட்டமாக இயக்கப்பட உள்ளது. பயணிகளின் வருகையை பொறுத்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று மண்டல போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே வேலூர் மண்டல போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் நடராஜன் நேற்று மதியம் வேலூர் பழைய பஸ்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நகர, புறநகர் பஸ்கள் நிறுத்துமிடம் மற்றும் பஸ் நிலையத்தின் உள்ளே பஸ்கள் வரும் பாதை, வெளியே செல்லும் பாதைகளை பார்வையிட்டார். பின்னர் போக்குவரத்துக்கு இடையூறாக, பஸ்நிலையத்துக்கு பஸ்கள் வரும் பாதையில் ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

அதற்கு 2-வது மண்டல உதவிகமிஷனர் மதிவாணன், பஸ்நிலையம் மற்றும் பஸ்நிலையத்தின் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் மற்றும் அவற்றை பறிமுதல் செய்யும்படி போக்குவரத்து போலீசாரிடம் தெரிவித்து விட்டதாக கூறினார். மேலும் பஸ்நிலையத்துக்குள் தடையை மீறி வரும் வாகனங்களுக்கு மாநகராட்சி சார்பில் ரூ.500 அபராதம் விதிக்கப்பட உள்ளது என்றார். இந்த ஆய்வின்போது போக்குவரத்து அலுவலர்கள், மாநகராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.

வேலூர் புதிய பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே செல்வதற்கு ஏதுவாக காட்பாடி-வேலூர் சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பு பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. மேலும் பஸ்நிலையம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது.

Next Story