கர்நாடகத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மழை-வெள்ள பாதிப்பை பார்வையிட வந்த மத்திய குழுவினர் எடியூரப்பாவுடன் சந்திப்பு


கர்நாடகத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மழை-வெள்ள பாதிப்பை பார்வையிட வந்த மத்திய குழுவினர் எடியூரப்பாவுடன் சந்திப்பு
x
தினத்தந்தி 8 Sept 2020 1:58 AM IST (Updated: 8 Sept 2020 1:58 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் குறிப்பாக குடகு, பாகல்கோட்டை, விஜயாப்புரா, பெலகாவி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

பெங்களூரு,

கனமழை காரணமாக மழை வெள்ளத்தில் விவசாய பயிர்கள் சேதம் அடைந்தன. ஏராளமானோர் வீடுகளை இழந்தனர். சுமார் ரூ.4,800 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கர்நாடக அரசு ஏற்கனவே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. கர்நாடக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று, மழை-வெள்ள சேதங்களை பார்வையிட்ட மத்திய உள்துறை இணை செயலாளர் கே.வி.பிரதாப் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை கர்நாடகம் வந்தனர்.

பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் முதல்-மந்திரி எடியூரப்பாவை மத்திய குழுவினர் நேற்று நேரில் சந்தித்து பேசினர். அப்போது, கர்நாடகத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் குறித்து அவர்களிடம் எடியூரப்பா விளக்கி கூறினார். மழை, வெள்ள சேதம் குறித்த அறிக்கை ஒன்றையும் மத்திய குழுவிடம் வழங்கினார். மாநிலத்திற்கு அதிக நிவாரணம் கிடைக்க உதவுமாறு கேட்டுக் கொண்டார். மத்திய குழுவினரின் மத்தியில் எடியூரப்பா பேசும்போது கூறியதாவது:-

ரூ.200 கோடிநிவாரணம்

“கர்நாடகத்தில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டதால் ரூ.8,071 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2018, 2019-ம் ஆண்டுகளில் பெய்த பெருமழையால் 22 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது பெய்த மழைக்கு 4.03 லட்சம் எக்டேர் நிலப்பரப்பில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. சாலை, பாலம், மின் கம்பங்கள், பள்ளி கட்டிடங்கள், அரசு கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன.

முழுமையான சேதம் அடைந்த வீடுகளுக்கு நிவாரணமாக ரூ.5 லட்சம், அதிகம் சேதம் அடைந்த வீடுகளுக்கு ரூ.3 லட்சம், பாதி சேதம் அடைந்த வீடுகளுக்கு ரூ.50 ஆயிரத்தை அரசு வழங்குகிறது. கடந்த 2019-ம் ஆண்டு மழை நிவாரண பணிகளுக்கு அரசு ரூ.1,500 கோடி செலவு செய்தது. தற்போது கொரோனாவுக்கு மத்தியிலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரூ.200 கோடி அளவுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

வெள்ள பாதிப்பு, கொரோனா தடுப்பு பணிகளுக்கு மாநில இயற்கை பேரிடர் நிதியில் இருந்து ரூ.460 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்கவும், வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கவும் அதிக நிதியை மத்திய அரசிடம் இருந்து கர்நாடகம் எதிர்பார்க்கிறது.”

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

3 குழுக்களாக பிரிந்து ஆய்வு

இந்த கூட்டத்தில் துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள், வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி, விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல், வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா, உணவு மற்றும் பொதுவினியோகத்துறை மந்திரி கோபாலய்யா, சட்டத்துறை மந்திரி மாதுசாமி, தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மத்திய குழுவினர் 3 குழுக்களாக பிரிந்து சென்று, குடகு, பாகல்கோட்டை, விஜயாப்புரா, பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும்(செவ்வாய்க்கிழமை), நாளையும்(புதன்கிழமை) ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆய்வின்போது, மத்திய குழுவினருடன் செல்லும் கர்நாடக அரசு அதிகாரிகள் உடன் இருந்து நிலைமையை அவர்களுக்கு எடுத்துக் கூறுவார்கள். மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு மத்திய குழுவினரை அழைத்து செல்ல தேவையான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் செய்யப்பட்டுள்ளன.

Next Story