தற்காலிக மார்க்கெட்டை மீண்டும் பழைய இடத்துக்கு மாற்றக்கோரி திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் வியாபாரிகள் முற்றுகை


தற்காலிக மார்க்கெட்டை மீண்டும் பழைய இடத்துக்கு மாற்றக்கோரி திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் வியாபாரிகள் முற்றுகை
x
தினத்தந்தி 8 Sept 2020 3:21 AM IST (Updated: 8 Sept 2020 3:21 AM IST)
t-max-icont-min-icon

எண்ணூர் விரைவு சாலையில் உள்ள தற்காலிக மார்க்கெட்டை மீண்டும் திருவொற்றியூர் மாநகராட்சி மார்க்கெட்டுக்கு இடமாற்றம் செய்யக்கோரி வியாபாரிகள் பேரணியாக சென்று மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் பட்டினத்தார் கோவில் தெரு அருகே உள்ள மாநகராட்சி மார்க்கெட் வளாகத்தில் மீன் கடைகள், காய்கறி மற்றும் மளிகை கடைகள் என சுமார் 350-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வியாபாரம் செய்து வந்தனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த 5 மாதங்களாக இந்த மாநகராட்சி மார்க்கெட் வளாகம் மூடப்பட்டது. அதற்கு பதிலாக அருகில் உள்ள எண்ணூர் விரைவு சாலை சர்வீஸ் சாலையில் மாநகராட்சி சார்பில் தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டு அங்கு வியாபாரம் செய்து வந்தனர்.

இந்த சாலையில் கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. தற்போது ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பெரும்பாலான கடைகள் இயங்கி வருகின்றன.

வியாபாரிகள் முற்றுகை

இதையடுத்து எண்ணூர் விரைவு சாலையில் உள்ள தற்காலிக மார்க்கெட்டை மீண்டும் பட்டினத்தார் கோவில் தெரு அருகே அமைந்துள்ள பழைய மாநகராட்சி மார்க்கெட்டுக்கு மாற்றக்கோரி வியாபாரிகள் திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தற்காலிக மார்க்கெட்டை மீண்டும் பட்டினத்தார் கோவில் தெருவில் உள்ள மாநகராட்சி மார்க்கெட் பகுதிக்கு மாற்ற வலியுறுத்தி சங்க மாநில தலைவர் கொளத்தூர் ரவி தலைமையில் நிர்வாகிகள் அருணாச்சலம், மூர்த்தி, உத்தண்டராமன் மற்றும் 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் திருவொற்றியூர் பட்டினத்தார் கோவில் தெருவில் உள்ள மாநகராட்சி மார்க்கெட் பகுதிகளில் ஒன்று கூடினர்.

அங்கிருந்து ஊர்வலமாக திருவொற்றியூர் மண்டல அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அதிகாரிகள் இல்லாததால் ஆத்திரமடைந்த வியாபாரிகள், மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் சுமார் 1 மணி நேரம் கழித்து அங்கு வந்த மண்டல அலுவலரை சந்தித்து தங்கள் கோரிக்கை குறித்த மனுவை அளித்து கலைந்து சென்றனர்.

Next Story