தாய் வீட்டுக்கு சென்ற மனைவி திரும்ப வராததால் சோகம்: ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை


தாய் வீட்டுக்கு சென்ற மனைவி திரும்ப வராததால் சோகம்: ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 7 Sep 2020 10:02 PM GMT (Updated: 7 Sep 2020 10:02 PM GMT)

உத்திரமேரூர் அருகே கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற மனைவி குடும்பம் நடத்த திரும்ப வராத சோகத்தில் ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

உத்திரமேரூர்,

உத்திரமேரூர் அடுத்த தோட்டநாவல் கிராமத்தை சேர்ந்தவர் வரதன். இவரது மகள் வளர்மதி (வயது 33). கடந்த 2009-ம் ஆண்டு வளர்மதிக்கும், சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவரான ராஜா (36) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், இவர்களுக்கு தீபக் (10), சதீஷ் (8) என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ராஜாவிற்கும், வளர்மதிக்கும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த வளர்மதி கோபித்துக்கொண்டு தனது பிள்ளைகளுடன் தோட்டநாவல் கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றார். இதையடுத்து, ராஜா அவரது மாமனார் வீட்டுக்கு சென்று தனது மனைவி வளர்மதியை சமாதானம் செய்து குடும்பம் நடத்த வீட்டிற்கு அழைத்து செல்ல முயன்றுள்ளார். அதற்கு அவரது மனைவி மறுத்துவிட்டதால் மனமுடைந்த நிலையில் ராஜா தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

தீக்குளித்தார்

அப்போது வீட்டில் சோக மாக இருந்த அவர், சமையல் அறையில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். மள, மளவென பற்றி எரிந்த தீ அவர் உடல் முழுவதும் பற்றி எரிந்ததில், பலத்த தீக்காயம் அடைந்தார்.

இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story