திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா ஒதுக்கியதற்கு எதிர்ப்பு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு


திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா ஒதுக்கியதற்கு எதிர்ப்பு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 8 Sept 2020 3:36 AM IST (Updated: 8 Sept 2020 3:36 AM IST)
t-max-icont-min-icon

செய்யூர் அருகே மாவட்ட நிர்வாகம் சார்பில் திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகாவுக்குட்பட்ட புத்திரன் கோட்டை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலையில் அந்த நிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு திருநங்கைகள் 51 பேருக்கு அரசு சார்பில் வீட்டுமனை பட்டா வழங்குவது என காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மூலமாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, திருநங்கைகளுக்கு நிலம் ஒதுக்கப்பட்ட இடத்தில் செய்யூர் தாசில்தார் ராஜேந்திரன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் மற்றும் சூனாம்பேடு இன்ஸ்பெக்டர் தரனேஸ்வரி ஆகியோர் நிலத்தை அளக்க சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து, தங்களுக்கு எந்த ஒரு அறிவிப்பும் இன்றி அந்த இடத்தில் நில அளவீடு செய்வதை கண்டித்து வருவாய்த்துறை மற்றும் போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அப்பகுதியில் நீண்ட நாட்கள் வசிக்கும் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட கலெக்டர், தாசில்தார், ஆர்.டி.ஓ. உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், வருவாய்த்துறையினர் திருநங்கைகளுக்கு பட்டா நிலம் ஒதுக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கலெக்டரிடம் மனு

மேலும் அந்த இடம் கிராம மக்கள் அனுபவத்தில் உள்ள இடம் என்றும், எனவே திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா ஒதுக்கக்கூடாது எனவும் தெரிவித்தனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்குமாறு வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களிடம் கூறி சமாதானப்படுத்தினர். இதனையடுத்து நேற்று 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் ஜான் லூயிசை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அதில், திருநங்கைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடம் கிராம மக்களான தங்களது பயன்பாட்டில் உள்ளது என்றும், கிராமத்தில் அதிகம் பேர் வீட்டுமனை பட்டா இல்லாமல் உள்ள நிலையில், அவர்களுக்கு வீட்டுமனை பட்டா ஒதுக்கித் தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து, மனுவை மதுராந்தகம் ஆர்.டி.ஓ.வுக்கு அனுப்பி அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கூறி அனுப்பி வைத்ததாக தெரிகிறது.

Next Story