ஆன்லைன் உணவு வினியோகிக்கும் போர்வையில் கேளிக்கை விடுதிகளுக்கு கஞ்சா விற்ற என்ஜினீயர்கள் கைது


ஆன்லைன் உணவு வினியோகிக்கும் போர்வையில் கேளிக்கை விடுதிகளுக்கு கஞ்சா விற்ற என்ஜினீயர்கள் கைது
x
தினத்தந்தி 7 Sep 2020 10:16 PM GMT (Updated: 7 Sep 2020 10:16 PM GMT)

சோழிங்கநல்லூரில் ஆன்லைன் உணவு வினியோகிக்கும் போர்வையில் கேளிக்கை விடுதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு கஞ்சா வினியோகம் செய்த என்ஜினீயரிங் பட்டதாரிகள் 3 பேர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சோழிங்கநல்லூர்,

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக செம்மஞ்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, கஞ்சா விற்பனையை தடுக்கும் பொருட்டு சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்பேரில், கூடுதல் போலீஸ் கமிஷனர் தினகரன் அறிவுறுத்தலின் பேரில், கிழக்கு மண்டல இணை போலீஸ் கமிஷனர் பாபு அவர்களின் கண்காணிப்பில், அடையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் மற்றும் உதவி போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்நிலையில் ஆன்-லைன் மூலம் உணவு வினியோகம் செய்யும் ஆட்கள் மூலம் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, செம்மஞ்சேரி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் உள்ளிட்ட போலீசார் சோழிங்கநல்லூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே ஆன்லைன் உணவு வினியோகம் செய்யும் ஆட்களை 2 நாட்களாக பின்தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்.

என்ஜினீயரிங் பட்டதாரிகள்

இதில் தனியார் நிறுவன ஆன்லைன் உணவு வினியோக செய்யும் ஊழியர் விஜய் (வயது 27) என்பவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் உள்ள உணவு வினியோகம் செய்வது போல் கஞ்சாவும், சிகரெட்டில் வைத்து உபயோகிக்கும் கஞ்சா ஆயில், சிரஞ்சுகளும் பெட்டியில் வைத்திருந்து விற்பனை செய்ததை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து, அவரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில், அதே குடியிருப்பில் தங்கியுள்ள திருப்பத்தூரைச் சேர்ந்த புகழ்(வயது 26), அவருடைய நண்பர்களான கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அருண்(27), சென்னை அண்ணாநகரைச்சேர்ந்த நவோதித் (24) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட 3 பேரும் ஒன்றாக தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து முடித்த பட்டதாரி என்ற நிலையில், புகழ் மற்றும் நவோதித் வேலையில்லாமல் இருந்துள்ளனர். அருண் சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக உள்ளார்.

4 பேர் கைது

இவர்கள் 3 பேரும் விலையுயர்ந்த கார் மூலம் ஆந்திரமாநிலம் நெல்லூர் சென்று கஞ்சா கடத்தி வந்து தனியார் ஆன்லைன் ஊழியர் விஜய் மூலம் கஞ்சா மற்றும் கஞ்சா ஆயிலை விற்பனை செய்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் சென்னையில் உள்ள முக்கிய பிரமுகர்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அவற்றை வினியோகம் செய்துள்ளது தெரியவந்தாக போலீசார் தெரிவித்தனர்.

இவர்களிடமிருந்து 10½ கிலோ கஞ்சா, 10 மி.லி. அளவுள்ள கஞ்சா ஆயில், 16 சிரஞ்சுகள், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். 4 பேரையும் கைது செய்த செம்மஞ்சேரி போலீசார் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story