சுஷாந்திற்காக போதைப்பொருள் வாங்கியதாக குற்றச்சாட்டு நடிகை ரியா அதிரடி கைது சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவு


சுஷாந்திற்காக போதைப்பொருள் வாங்கியதாக குற்றச்சாட்டு நடிகை ரியா அதிரடி கைது சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 9 Sept 2020 1:19 AM IST (Updated: 9 Sept 2020 1:19 AM IST)
t-max-icont-min-icon

தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங்குக்காக போதைப்பொருள் வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரபோர்த்தி நேற்று கைது செய்யப்பட்டார்.

மும்பை,

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் (வயது34) கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நடிகை ரியா

இது தொடர்பாக மும்பை போலீசார் விசாரித்து வந்த நிலையில், பீகாரில் வசித்து வரும் சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின் பேரில் சுஷாந்த் சிங்கின் காதலியும், இந்தி நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி(28) மீது பாட்னா போலீசார் தற்கொலைக்கு தூண்டுதல், பணமோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

வழக்கை விசாரிக்கும் அதிகாரம் யாருக்கு என்பதில் மும்பை மற்றும் பாட்னா போலீசார் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, பீகார் அரசின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சி.பி.ஐ.யும், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.15 கோடி மோசடி நடந்ததாக கூறப்படுவது குறித்து அமலாக்கத்துறையும் நடிகை ரியாவிடம் பலகட்ட விசாரணை நடத்தியது. அப்போது வழக்கு வேறு திசைக்கு மாறியது. நடிகை ரியா போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்தது செல்போன் உரையாடல் மூலம் வெளிச்சமானது.

இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் வழக்கை கையில் எடுத்து விசாரிக்க தொடங்கினர். இதில் நடிகை ரியா போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது.

இது தொடர்பாக போதைப்பொருள் வாங்கியது, பயன்படுத்தியது, சப்ளை செய்தது போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் நடிகை ரியாவின் தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வீட்டு வேலைக்காரர் தீபேஷ் சாவந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் போதைப்பொருள் விற்பனை செய்ததாக மேலும் சிலரும் கைதானார்கள்.

அதிரடி கைது

இந்த வழக்கில் நடிகை ரியாவிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று 3-வது நாளாக விசாரித்தனர். இதற்காக மும்பை பல்லர்டு எஸ்டேட் பகுதியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு நேற்று காலை நடிகை ரியா வந்தார். அவர் பை ஒன்றையும் கையில் எடுத்து வந்திருந்தார். விசாரணையின் போது, அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டதாக தெரியவந்தது. இதையடுத்து நடிகை ரியா மாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

கைதானதை தொடர்ந்து அவர் சயான் மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. அப்போது அவருக்கு தொற்று இல்லை என்று தெரியவந்தது.

ஜாமீன் மனு நிராகரிப்பு

இதையடுத்து அவரை மீண்டும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வந்து, அங்கிருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, நடிகர் சுஷாந்த் சிங்கிற்காக நடிகை ரியா போதைப்பொருள் வாங்கியதாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரிடம் போதிய விசாரணை நடத்தி விட்டதால், அவரை சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும் என்று கோர்ட்டை கேட்டுக்கொண்டனர்.

அப்போது நடிகை ரியா தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஜாமீன் மனுவை நிராகரித்த கோர்ட்டு அவரை வருகிற 22-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து நடிகை ரியா போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் உள்ள லாக்-அப்பில் அடைக்கப்பட்டார். இன்று (புதன்கிழமை) பைகுல்லா சிறைக்கு அழைத்து செல்லப்படுவார் என்று கூறப்படுகிறது.

திரையுலகினர் கலக்கம்

இந்தி திரையுலகில் போதைப்பொருள் பயன்படுத்திய பலரின் பெயரை நடிகை ரியா வெளியிட்டதாக கூறப்படுகிறது. அவர்களில் விசாரணை நடத்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்தி திரையுலகினர் பலர் கலக்கத்தில் உள்ளனர்.

இதற்கிடையே போதை பழக்கத்துக்கு அடிமையான மற்றும் மன நல பாதிப்புக்கு உள்ளான நடிகர் சுஷாந்த் சிங்கை காதலித்த ஒரே காரணத்திற்காக சி.பி.ஐ., அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகிய 3 விசாரணை அமைப்புகளால் நடிகை ரியா வேட்டையாடப்பட்டு இருக்கிறார் என்று அவரது வக்கீல் சதீஷ் மனேஷிண்டே குற்றம்சாட்டினார்.



Next Story