எம்.எல்.ஏ. ஆதரவாளர் கொலையில் 5 பேர் சிக்கினர்


எம்.எல்.ஏ. ஆதரவாளர் கொலையில் 5 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 9 Sept 2020 3:06 AM IST (Updated: 9 Sept 2020 3:06 AM IST)
t-max-icont-min-icon

புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆதரவாளர் கொலையில் 5 பேர் போலீஸ் பிடியில் சிக்கி உள்ளனர்.

புதுச்சேரி,

புதுவை முத்தியால்பேட்டை சின்னையாபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 54). கதர்வாரிய துணை தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணனின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

நேற்று முன்தினம் மாலை இவர் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பியபோது வாழைக்குளம் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

5 பேர் சிக்கினர்

விசாரணையில் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டது வாழைக்குளத்தை சேர்ந்த வெங்கடேசன், அரவிந்த், வைத்திக்குப்பத்தை சேர்ந்த கட்ட செந்தில், அங்காளம்மன் நகரை சேர்ந்த அஜய் என்பது தெரியவந்தது. இதில் வெங்கடேசன் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

தற்போது வெங்கடேசன் உள்பட 5 பேர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கணேசனுக்கு அந்த பகுதியை சேர்ந்த சிலரிடம் தேர்தல் மற்றும் நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அதன் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

போலீசாரிடம் சிக்கிய 5 பேருக்கும் இன்று (புதன்கிழமை) கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

திடீர் மறியல்

இதற்கிடையே கொலையான கணேசனின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வாகனத்தில் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது. அந்த உடல் வந்தபோது அஜந்தா சிக்னலில் அவரது ஆதரவாளர்கள் திரண்டு நின்றனர். கொலையாளிகளை கைது செய்யக்கோரி அவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் கொலையாளிகளை விரைவில் கைது செய்வதாக சமாதானப்படுத்தினர். அதன்பேரில் மறியல் கைவிடப்பட்டது. தொடர்ந்து கணேசனின் உடல் அவரது இல்லத்துக்கு எடுத்து செல்லப்பட்டு மாலையில் இறுதி சடங்குகள் நடந்தன.

Next Story