செங்கல்பட்டு அருகே ரூ.6½ லட்சம் கடனை திருப்பி தராததால் விவசாயி கடத்தல் 5 பேர் கைது


செங்கல்பட்டு அருகே ரூ.6½ லட்சம் கடனை திருப்பி தராததால் விவசாயி கடத்தல் 5 பேர் கைது
x
தினத்தந்தி 9 Sept 2020 4:56 AM IST (Updated: 9 Sept 2020 4:56 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு அருகே ரூ.6½ லட்சம் கடனை திருப்பி தராததால் விவசாயி கடத்தப்பட்டார். இது தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு,

காஞ்சீபுரத்தை அடுத்த வையாவூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 35). விவசாயி. நேற்று அவர் செங்கல்பட்டில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டு செங்கல்பட்டு அடுத்த பழைய சீவரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே காரில் வந்த நபர்களால் அவர் கடத்தி செல்லப்பட்டார்.

இது குறித்து அக்கம்பக்கத்தினர் பாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து செயல்பட்டு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே மடக்கி பிடித்தனர்.

5 பேர் கைது

காரில் இருந்து தப்பியோட முயன்ற திண்டிவனத்தை சேர்ந்த ராஜதுரை என்ற மணிகண்டன் (33), மாதவன் (25), ராஜரத்தினம் (34), மைக்கேல் (35), சந்தோஷ் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திண்டிவனத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவரிடம் இருந்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பார்த்தசாரதி ரூ.6½ லட்சத்தை கடனாக பெற்றுள்ளார். அவர் ரூ.6½ லட்சம் மற்றும் அதற்கான வட்டியை செலுத்தாமல் இருந்துள்ளார். இது குறித்து பார்த்தசாரதியிடம் போனில் தொடர்பு கொண்ட லட்சுமணன் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

கடனை திருப்பி தர மறுப்பு

அதற்கு பார்த்தசாரதி வாங்கிய கடனை திருப்பி தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமணன் திண்டிவனத்தை சேர்ந்த கூலிப்படையை ஏவி பார்த்தசாரதியை கடத்தி வருமாறு கூறியுள்ளார். கூலிப்படையை சேர்ந்த 5 பேரும் பார்த்தசாரதியின் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர்.

அங்கே பார்த்தசாரதி இல்லாததால் திரும்பி திண்டிவனத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். பழையசீவரம் அருகே வரும் போது பார்த்தசாரதியை பார்த்த கூலிப்படையினர் அவரை காரில் கடத்தினர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள லட்சுமணனை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story