சொத்துக்காக தந்தையை கொன்ற மகன் வழக்கில் கூலிப்படையை சேர்ந்த 5 பேர் கைது


சொத்துக்காக தந்தையை கொன்ற மகன் வழக்கில் கூலிப்படையை சேர்ந்த 5 பேர் கைது
x
தினத்தந்தி 10 Sept 2020 4:20 AM IST (Updated: 10 Sept 2020 4:20 AM IST)
t-max-icont-min-icon

சொத்துக்காக தந்தையை கொன்ற மகன் வழக்கில் கூலிப்படையை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 58). விவசாயி. இவருக்கு கோவிந்தம்மாள், பத்மாவதி என்ற 2 மனைவிகள் உள்ளனர். சொத்து விவகாரத்தில் இரு குடும்பத்தினருக்கும் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி ஜெயராமன் மயங்கி விழுந்து இறந்ததாக முதல் மனைவி கோவிந்தம்மாள் மகன் விக்னேஷ் தெரிவித்தார். ஜெயராமனின் உடலை வீட்டுக்கு எடுத்து வந்து இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது ஜெயராமனின் கழுத்து பகுதியில் காயம் இருப்பதை உறவினர்கள் பார்த்து சந்தேகம் அடைந்தனர்.

இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் ஜெயராமனின் மகன் விக்னேஷ் கூலிப்படை அமைத்து தந்தையை கொலை செய்தது தெரியவந்தது.

கைது

இதையடுத்து கடந்த 6-ந்தேதி விக்னேசை போலீசார் கைது செய்தனர். விக்னேஷ் அளித்த வாக்குமூலத்தில் தந்தை ஜெயராமன் 2-வது மனைவி குடும்பத்துக்கு சொத்துகளை கொடுத்து வந்ததாகவும், தன்னுடைய குடும்பத்துக்கு எதுவும் செய்யாததால் ஆத்திரத்தில் தந்தையை கூலிப்படை அமைத்து கொலை செய்ததாக தெரிவித்தார்.

கூலிப்படையினர் சுங்குவார்சத்திரம் அருகே வயல்வெளியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் விரைந்து சென்று திருவள்ளூர் மாவட்டம் திருவூர் பகுதியை சேர்ந்த ரவுடியான பிரேம் (37), விக்னேஷ் (22), அஸ்வின் (24), புட்லூர் பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் (27), முத்துக்குமார் (22) ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பிரேம் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன.

ரூ.7 லட்சம்

போலீஸ் விசாரணையில் விக்னேஷ் தனது தந்தையை கொலை செய்ய கூலிப்படையினருக்கு ரூ.7 லட்சம் தருவதாக கூறி முன்பணமாக ரூ.30 ஆயிரம் கொடுத்துள்ளார்.

கொலை செய்த பிறகு மீதி பணத்தை தருவதாக கூறியுள்ளார் என்பதும் தெரியவந்தது.

Next Story