நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி புதிதாக 257 பேருக்கு தொற்று


நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி புதிதாக 257 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 10 Sep 2020 4:35 PM GMT (Updated: 10 Sep 2020 4:35 PM GMT)

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியானார்கள்.

தூத்துக்குடி,

நெல்லை மாவட்டத்தில் நேற்று அரசு டாக்டர், போலீஸ்காரர், 8 வயது குழந்தைகள் 2 பேர் உள்பட 139 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நெல்லை மாநகர பகுதியில் மட்டும் 48 பேருக்கு தொற்று உறுதியானது. இதுதவிர நாங்குநேரி பகுதியை சேர்ந்த 11 பேர், சேரன்மாதேவி பகுதியை சேர்ந்த 4 பேர், களக்காடு பகுதியை சேர்ந்த 5 பேர், மானூர் பகுதியை சேர்ந்த 21 பேர், ராதாபுரம் பகுதியை சேர்ந்த 5 பேர், வள்ளியூர் பகுதியை சேர்ந்த 13 பேர், அம்பை பகுதியை சேர்ந்த 7 பேர், பாளையங்கோட்டை புறநகர் பகுதியை சேர்ந்த 16 பேர், பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 662 ஆக அதிகரித்து உள்்ளது. இவர்களில் 9 ஆயிரத்து 379 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று நெல்லையை சேர்ந்த மருந்துக்கடை உரிமையாளர் ஒருவர் கொரோனாவுக்கு பலியானார். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 190-ஆக உள்ளது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 60 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதில் ஆலங்குளம் யூனியன் பகுதியில் 8 பேர், கடையம், கடையநல்லூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில் யூனியன் பகுதிகளில் தலா ஒருவர், கீழப்பாவூர் யூனியன் பகுதியில் 17 பேர், செங்கோட்டை யூனியன் பகுதியில் 16 பேர், தென்காசி யூனியன் பகுதியில் 14 பேர், வேறுமாவட்டத்தை சேர்ந்தவர் ஒருவர் அடங்குவர்.

மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 19 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 5 ஆயிரத்து 225 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 681 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் நேற்று இறந்து உள்ளனர். இந்த மாவட்டத்தில் இதுவரை 113 பேர் பலியாகி உள்ளனர்.

தூத்துக்குடியில் ஒருவர் சாவு

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று புதிதாக 58 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 952 ஆக உள்ளது. நேற்று முழுமையாக 19 பேர் குணமடைந்து உள்ளனர். எப்போதும்வென்றான் பகுதியைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று பரிதாபமாக இறந்தார். இதனால் மாவட்டத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 118 ஆனது.

Next Story