என்னை மந்திரி சபையில் இருந்து வெளியேற்ற ‘பட்னாவிஸ் செய்த சதியை அம்பலப்படுத்துவேன்’ ஏக்நாத் கட்சே பேட்டி


என்னை மந்திரி சபையில் இருந்து வெளியேற்ற ‘பட்னாவிஸ் செய்த சதியை அம்பலப்படுத்துவேன்’ ஏக்நாத் கட்சே பேட்டி
x
தினத்தந்தி 11 Sept 2020 1:15 AM IST (Updated: 11 Sept 2020 1:15 AM IST)
t-max-icont-min-icon

முந்தைய ஆட்சியில் என்னை மந்திரி சபையில் இருந்து வெளியேற்ற தேவேந்திர பட்னாவிஸ் செய்த சதியை அம்பலப்படுத்துவேன் என்று ஏக்நாத் கட்சே கூறினார்.

மும்பை,

முந்தைய தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி காலத்தில் அவருக்கு அடுத்தபடியான நிலையில் இருந்தவர் கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே. அவர் வருவாய் துறை மந்திரியாக பதவி வகித்து வந்தார்.

இந்தநிலையில் அவர் மீது நிலமோடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். பின்னர் தொடர்ந்து கட்சியில் அவர் ஓரங்கட்டப்பட்டதுடன், நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் மறுக்கப்பட்டதால் பாரதீய ஜனதா தலைமையின் மீது அதிருப்தியில் உள்ளார். மேலும் தேவேந்திர பட்னாவிசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று ஜல்காவில் நிருபர்களை சந்தித்த ஏக்நாத் கட்சே அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆதாரத்துடன் விவரிப்பேன்

முந்தைய ஆட்சி காலத்தில் ஏதோ சதித்திட்டத்தின் ஒரு பகுதி போல, ஒன்றன் பின் ஒன்றாக என் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. என்னை மந்திரி சபையில் இருந்து வெளியேற்ற சதி நடந்தது.

லோக் அயுக்தா, ஊழல் தடுப்பு பிரிவு கொண்டு விசாரணை நடத்தியும் என் பக்கத்தில் இருந்து எந்த தவறும் கண்டறியப்படவில்லை என தேவேந்திர பட்னாவிசை சந்தித்தபோது என்னிடம் தெரிவித்தார். எனக்கு நீதி வழங்க வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் நான் பலமுறை கோரிக்கை வைத்தும் எனது குற்றமற்ற தன்மையை அப்போதைய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வெளியில் சொல்ல தவறிவிட்டார்.

இதன்மூலம் என் மீதான குற்றங்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேவேந்திர பட்னாவிசின் கை வண்ணம் உள்ளது என்பது எனது கருத்து.

இந்த முழு அத்தியாயத்தையும் நான் புத்தகமாக எழுதப்போகிறேன். அதற்கான வேலையை தற்போதே தொடங்கிவிட்டேன். இந்த புத்தகத்திற்கு பெயர் “நானாசாகேப் பட்னாவிசஞ்ச் சந்தியந்தரா(சதி)” என்பதாகும்.

விரைவில் வெளியாகும் அந்த புத்தக்கத்தில் சதித்திட்டம் எப்படி நடந்தது என்பதை ஆதாரங்களுடன் விவரிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story